வைகோவிடம் வாலாட்டி... பாஜகவிடம் பம்மி... திமுகவிடம் சீட் வாங்கிய டாக்டர் சரவணன்..!

By Thiraviaraj RMFirst Published Apr 13, 2019, 3:54 PM IST
Highlights

மதுரையைத் தாண்டி யாருக்குமே தெரிந்திராத டாக்டர் சரவணன் நான்கே ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள நண்டு சுண்டுக்கெல்லாம் தெரியும் அளவுக்கு மாறி அரசியல் விஐபி ஆகிவிட்டார். 

மதுரையைத் தாண்டி யாருக்குமே தெரிந்திராத டாக்டர் சரவணன் நான்கே ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள நண்டு சுண்டுக்கெல்லாம் தெரியும் அளவுக்கு மாறி அரசியல் விஐபி ஆகிவிட்டார். 

இத்தனைக்கும் டாக்டர் சரவணன் அமைச்சராகவோ, எம்.பியாகவோ ஏன் எம்.எல்.ஏவாகவோ கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் திடீர் விஐபியாக விஸ்வரூபம் எடுக்கக் காரணம் திருப்பரங்குன்றம் தொகுதி. (சரவணன் எனப்பெயர் கொண்டிருப்பதால் திருப்பரங்குன்றத்தில் குடிகொண்டிருக்கும் ‘சரவணன் (முருகன்) ஆசி அப்படி!)

மதுரை நரிமேட்டில் சரவணா ஹாஸ்பிட்டல் நடத்தி வரும் சரவணன் காசு இல்லாமல் வருபவர்களுக்கு இலவச வைத்தியம் செய்து சுற்று வட்டாரத்தில் பிரபலமானார். இவரும், மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் அன்புச்செழியனும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள்.
அகிலன் என்ற படத்தில்தான் முதல் முறையாக நடிகராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் டாக்டர் சரவணன். இப்படத்திற்காக பணத்தை வாரி இறைத்தார். மதுரை நகர் எங்கும் அகிலனாய் கட் அவுட், தட்டி வைத்து கலக்கினார் சரவணன்.

சினிமா அடுத்து அரசியல் என்கிற வழக்கப்படி திமுகவில் சேர்ந்தார் சரவணன். பணமும் புகழும் இருந்தும், மதுரையில் திமுக புள்ளிகளை தாண்டி கவனம் சரவணின் சரக்கு எடுபடவில்லை. ஓரிரு ஆண்டில் தனது ஜாகையை மதிமுக பக்கம் மாற்றினார். அங்கே டீ ஆற்ற ஆளில்லை என்பதால் பெரும் பதவி கிடைக்கும் என வைகோவை நம்பிப்போனார். இறக்கமற்ற வைகோ பாவம் சரவணனுக்கு கொடுத்த பதவி மதுரை புறநகர் மாவட்டச் செயலர். 

பசையிருக்கும்போது இந்த பதவி சரவணனுக்கு துச்சமாக தெரிய இரண்டே ஆண்டுகளில் வைகோவை உதறித் தள்ளிவிட்டு பாஜகவில் பொன்னார் முன்னிலையில் பொன்னாடை போர்த்திக் கொண்டார் சரவணன். ‘என்ன போங்க டாக்டர். இருந்து இருந்து பாஜகவுல் போய் சேர்ந்திருக்கீங்க. உங்ககிட்ட இருக்கிற பசைக்கு நீங்க மறுபடியும் உடன்பிறப்பாக மாறினால்தான் நல்லது’’ என தூபம் போட பாஜகவில் இருந்து இரண்டே மாதங்களில் திமுகவுக்கு தாவினார் சரவணன்.     

திமுக, மதிமுக, பாஜகவின் "கொள்கை, தாத்பர்யம்" உள்ளிட்டவற்றை கற்று முடிப்பதற்குள்ளாகவே அக்கட்சிகளில் இருந்து அடுத்தடுத்து விலகி மீண்டும் திமுகவிற்கே திரும்பிய சரவணனை 6 மாதங்களில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் களமிறக்கினார் கருணாநிதி. 

2016ல் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸிடம் தோல்வியை தழுவினார் டாக்டர் சரவணன். அவரது வெற்றியை எதிர்த்து டாக்டர் பி.சரவணன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், அதிமுக, வேட்பாளராக ஏ.கே.போஸ் தாக்கல் செய்த வேட்புமனுவுடன் வேட்பாளரை பரிந்துரைக்கும் தேர்தல் படிவத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வைத்த கைவிரல் ரேகை போலியானது. எனவே, ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என்று அறிவித்து தன்னை வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஜெயலலிதாவின் கைரேகையை போலி எனக் கண்டுபிடித்து நீதிமன்றப்படியேறியது சரவணனின் பெயர் தமிழகத்தில் இண்டு இடுக்களிலெல்லாம் பரவத் தொடங்கியது. 

இந்நிலையில் மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பணபலத்தில் பலமாக இருப்பதால் சரவணன் முதல் முறையாக வெற்றி சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைப்பார் என நம்பி இந்த முறையும் சீட் கொடுத்துள்ளது திமுக தலைமை.   

click me!