உடைகிறதா திமுக கூட்டணி ! மக்களைவைத் தேர்தல் வேறு… சட்டசபைத் தேர்தல் வேறு … திருமாவின் பேச்சால் பரபரப்பு !!

By Selvanayagam PFirst Published May 7, 2019, 9:54 PM IST
Highlights

மக்களவைத் தேர்தலின் நோக்கம் பாஜகவை ஒழிப்பது அதனால் திமுவுடன் கூட்டணி வைத்துக் கொண்டோம், ஆனால் சட்டசபைத் தேர்தலில் அது தொடரும் என்று நிச்சயமாக முடியாது என தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், கூட்டணி என்பது  நிரந்தரமல்ல என்று கூறியிருப்பது திமுகவினரிடையே கொந்தளிப்பதை ஏற்படுத்தியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  பேட்டி அளித்துள்ளார்.  அதில் திமுகவுடன் - விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி வைத்ததால் அனைத்து தலித் வாக்குகளும் இந்தக் கூட்டணிக்கே கிடைத்துள்ளதாக கூறியுள்ளார். 

அது மட்டுமல்லாமல் அதிமுகவுக்கு பாரம்பரியமாக கிடைத்து வரும் தலித் ஓட்டுகள் கூட  இந்த முறை அக்கட்சி பாஜக மற்றும் பாமகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால் திமுக கூடடணிக்கே கிடைத்துள்ளதாகவும் திருமா கூறினார்.

தொடர்ந்து பேட்டியளித்த திருமா, சட்டமன்றத் தேர்தலுக்கும் மக்களவைத் தேர்தலுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாக கூறியுள்ளார். ஒரு கூட்டணி என்பது பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமைகிறது. நாங்கள் இப்போது வளரும் கட்சி. நாட்டின் முக்கிய பிரச்னைகளில் திமுக, அதிமுக என்ன நிலைப்பாடு மேற்கொள்கின்றன என்பதைப் பொறுத்தே நாங்கள் கூட்டணி பற்றி முடிவெடுப்போம் என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விசிகவின் முக்கிய இலக்கே  பாஜகவைத் தோற்கடிக்கவேண்டும் என்பது தான்.அதற்காகவே நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டோம் என தெரிவித்தார்.

ஆனால் சட்டமன்றத் தேர்தலில்  எங்கள் முக்கிய நோக்கம்  வேறு.  ஏனெனில் தமிழகத்தில் பாஜக முதன்மையான கட்சி அல்ல. எனவே சட்டமன்றத் தேர்தலில் எங்களின் பொது நோக்கம் மாறும் என்றார். மேலும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது நிரந்தரம் அல்ல என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். இவரின் இந்தப் பேச்சு திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!