திமுகவுடன் தொகுதி உடன்பாடு... முரண்டு பிடித்து இரண்டு தொகுதிகளை கைப்பற்றிய திருமா...!

By Selvanayagam PFirst Published Mar 4, 2019, 11:33 AM IST
Highlights

திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே இன்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விசிகவுக்கு இந்தக் கூட்டணியில் 2  தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
 

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி இடுகின்றன. அதே நேரத்தில் அந்தக் கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வர பாஜக பெரும் முயற்சி எடுத்து வருகிறது. 

ஆனால் பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகள் தங்களுக்கும் வேண்டும் என அக்கட்சி அடம் பிடிப்பதால் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. இன்னொரு புறம் திமுகவுடனும் தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து திமுக தேமுதிகவுக்காக காத்திருக்கிறது. அதற்காக தனது தோழமைக்கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இது மதிமுக, விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்தது . இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் விசிக இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இதில் திமுக சார்பில் துரை முருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர். விசிக சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்ட 4 பேர் பங்கேற்றனர்
.
விசிக தங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என கேட்டிருந்தது. ஆனால் ஒரு தொகுதிதான் ஒதுக்க முடியும் என திமுகஉறுதியான இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விசிக தனித்து போட்டியிடலாம் அல்லது டி.டி.வி.தினகரனுடன் இணைந்து போட்டியிலாம் என முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியானது.

தேமுதிகவுக்காக இது வரை காத்திருந்தது போதும் என முடிவு செய்த திமுக தற்போது தங்களது தோழமைக் கட்சிகளுடன் மீண்டும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.

இதன் முதல் கட்டமாக இன்று விசிகவுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதன்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் அல்லது திருவள்ளூர் தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 10, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, கொமதேக 1, இந்திய ஜனநாயக கட்சி 1 என திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மதிமுக, இடது சாரிகளுடன் விரைவில் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
 

click me!