எங்களுக்கு பத்தல... பேசிட்டு சொல்றோம்... திமுகவால் அதிருப்தியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்..!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 6, 2021, 11:13 AM IST
Highlights

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்றுவதில் உறுதியுடன் போராடி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற நிலையில், திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்காக டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. ஆனால் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் தொடர்ந்து தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தான் தொகுதி ஒதுக்க வேண்டும் என அடம்பிடித்து வந்தன.  கொடுக்கிற தொகுதியை வாங்கிக்கொள்ளுங்கள்... இல்லையெல் கூட்டணியை விட்டு விலகுங்கள்... என திமுக கறார் கட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று திமுக கொடுப்பதாக கூறிய 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கைப்பற்றுவதில் உறுதியுடன் போராடி வருகிறது. கடந்த 2ம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், நேற்று ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் ஆகியோருடன் கே.பாலகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினர். அப்போது தொகுதி பங்கீடு குறித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என்றும், மக்கள் நீதி மய்யத்துடன் 3வது அணி அமைப்பதற்காக எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் விளக்கமளித்தார். 

இன்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டுமென அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக - மார்க்சிஸ்ட் கட்சியினர் இடையே தொகுதி பங்கீடு குறித்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், திமுக ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளின் எண்ணிக்கை எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை, நீங்கள் ஒதுக்கீடு செய்யும் தொகுதிகள் குறித்து செயற்குழுவில் பேசிவிட்டு வருகிறோம் என கூறியுள்ளோம் என தெரிவித்தார். இன்றைய பேச்சுவார்த்தையில் சிபிஎம் கட்சிக்கு 9 சீட்டுக்கள் கேட்டதாகவும், ஆனால் திமுக 6 தொகுதிகளிலேயே நிற்பதும் தான் இழுபறிக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. 
 

click me!