இரண்டாயிரம் ரூபாயை ஆகஸ்ட் வரை கொடுக்கணும்.. மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சி கோரிக்கை..!

By Asianet Tamil  |  First Published May 29, 2021, 9:13 PM IST

நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் வழங்கும் 13 அத்தியாவசிய உணவுப் பொருட்களை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரையில் மாதந்தோறும் வழங்க வேண்டும் என்றும் ஜூன் மாதத்தில் 2000 ரூபாய் வழங்குவதை மேலும் இரண்டு மாதங்களுக்காவது தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அரசை வலியுறுத்தியுள்ளது.
 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில நிர்வாகக் குழு  கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “84 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்று முதல் தடவையாகக் குறைந்திருப்பது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. தேர்தல் வாக்குப் பதிவுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அரசாங்கமே இல்லாத நிலை தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டதால் கிருமித் தொற்று மிக வேகமாகத் தமிழகத்தை ஆட்கொண்டது. திமுக அரசு பதவி ஏற்கும்போது, நெருப்பில் இறங்கியதுபோல கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, வல்லுநர் பரிந்துரைகளையும் கேட்டு வேறுவழியின்றி பொது முடக்கம் செயலாக்கப்பட்டது.
உயிர் வளி (ஆக்சிஜன்) படுக்கைகள் பற்றாக்குறையைப் போக்க வழக்கமான சிவப்பு நாடா முறைகளைக் கைவிட்டுப் போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்காலிக மருத்துவமனைகள், அவற்றுக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நியமிப்பது, குடும்பத்திற்கு தலா இரண்டாயிரம் ரூபாய் ரொக்கப் பண உதவி ஆகியவை அதிவிரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன. தடுப்பூசி மருந்துகள் தேவையை நிறைவு செய்ய உலக அளவில் கொள்முதல் செய்ய முன்வந்ததும் பாராட்டுக்குரியது. அனைவருக்கும் தடுப்பூசி போடும் முயற்சியில், முதல் கட்டமாக 18-44 வயதினருக்கு மாநில அரசு தடுப்பூசி போடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதும், தனியார் மருத்துவமனைகளின் மருத்துவக் கட்டணத்தை நிர்ணயித்து, முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்க முன்வந்திருப்பதும் நம்பிக்கையூட்டும் செயலாகும்.
கொரோனா முதல் அலையைப் போல அல்லாது, இப்போது கிராமப் பகுதியில் அதிகரித்து வருகிறது. எனவே சிறு நகரங்கள், கிராமங்களில் கூடுதல் கவனம் தேவை. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் நோய்த் தடுப்பு மருத்துவத்தை அதிகப்படுத்தி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடக்க நிலையிலேயே சிகிச்சைகள் தரப்பட வேண்டும். இங்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கும், தடுப்பூசி போடுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் 13 அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஒரு இயல்பான வாழ்க்கை திரும்பும் வரையில் மாதந்தோறும் இந்தப் பொருட்களை வழங்குவது அவசியம். ஜூன் மாதத்தில் 2000 ரூபாய் வழங்குவதை மேலும் இரண்டு மாதங்களுக்காவது தொடர்ந்து வழங்க வேண்டும்.
மிகுந்த நிதிச்சுமையை தமிழக அரசு தாங்க வேண்டியிருந்தாலும், பொது முடக்கத்தின் காரணமாக வேலையும், வருவாயும் இழந்து நிற்கும் குடும்பங்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்ய செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தைத் தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த முடிவு செய்து, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருப்பது சரியான, நேரத்துக்கு ஏற்ற நடவடிக்கை. இந்நிறுவனத்தைத் தமிழ்நாடு அரசின் பொதுத் துறையாக செயல்படுத்துவது நல்ல பயனளிக்கும்.
நம்பிக்கை அளிக்கும் வகையிலும், உணர்வுபூர்வமாகவும் கொரோனா தொற்றை முற்றாக ஒழிப்பதற்காக திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் வரவேற்றுப் பாராட்டுகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்துத் தரப்பு மக்களும் பேராதரவும், ஒத்துழைப்பும் வழங்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது” என்று அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
 

click me!