போங்கய்யா.. நீங்களும் உங்க கட்சியும்... விரக்தியில் திமுகவுக்கு தாவிய தேமுதிக மாவட்டச் செயலாளர்..!

By Asianet TamilFirst Published Oct 15, 2021, 8:54 PM IST
Highlights

தேர்தல் வியூகம் வகுப்பதில் தொடர்ந்து சறுக்குவதால் தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருக்கிறார் தேமுதிக தெற்கு மாவட்டச் செயலாளர்.
 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. ஆனால், அக்கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஒரு காலத்தில் விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கோலோச்சிய பகுதிகளில்கூட தேமுதிக சோபிக்கவில்லை. தேர்தல் முடிவு வெளியான பிறகு, ‘தோல்வியைக் கண்டு தொண்டர்கள் துவள வேண்டாம்’ என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேமுதிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகோபால் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.


சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து திமுகவில் இணைந்தார். அவரோடு மாநில மாணவர் அணிச்செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் திமுகவில் இணைந்தனர். பின்னர் கிருஷ்ணகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது இருந்த ஈர்ப்பால், அவர் கட்சி தொடங்கியதிலிருந்து தேமுதிகவில் தீவிரமாகப் பணியாற்றி வந்தேன். மணப்பாறையில்  தேமுதிகவை வளர்த்ததில் எனக்கு பங்குண்டு. கடந்த சில ஆண்டுகளாகவே அக்கட்சியின் போக்கு ஏற்கும் வகையில் இல்லை. தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், கட்சியை நிர்வகிப்பவர்கள், 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்டச் செயலாளர்களைக்கூட அழைத்து ஆலோசனை செய்யவில்லை.
தேர்தல் வியூகம் வகுப்பதிலும் தேமுதிக தொடர்ந்து சறுக்கலைச் சந்தித்து வருகிறது. எனவே,  ஆதரவாளர்களின் எதிர்காலம் கருதி தேமுதிகவிலிருந்து விலக முடிவு செய்தேன். பாஜக உள்பட கட்சிகளிலிருந்து மாநில அளவில் பொறுப்புகள் வழங்குவதாக என்னை அழைத்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளதால், அவருடைய தலைமையை ஏற்க முடிவெடுத்தேன். 12 வயதிலேயே திமுக கொடி பிடித்து வளர்ந்தவன் நான். திமுக மாணவர் அமைப்பு தலைவராகவும் இருந்திருக்கிறேன். தாய்க் கட்சிக்கு திரும்பியதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கிருஷ்ணகோபால் தெரிவித்தார்.

click me!