
’அந்தம்மாவ எதிர்க்க சரியான ஆளு கேப்டன் தான்யா! எதுக்கும் அஞ்சாம, எப்படி கேக்குறார் பாரு கேள்வி.’ என்று சர்வ வல்லமை படைத்த ஜெயலலிதாவையே எதிர்த்துப் பேர் வாங்கியவர் விஜயகாந்த். இரு கழகங்களும் சற்றே அசந்திருந்தால், தமிழகத்தின் முதலமைச்சர்களின் பட்டியலில் தவறாமல் இடம் பிடித்திருப்பார்.
ஆனால் காலம் எந்த பிம்பத்தையும் தலைகீழாக காட்டிடக் கூடிய சூட்சமத்தை தனக்குள் கொண்டுள்ளது. அதனால்தான், ‘இந்தம்மாவ அடக்க பாவம் கேப்டனுக்கு திறனில்லையே பாரு.’ என்று தன் மனைவி பிரேமலதாவை கேள்வி கேட்க கூட இயலாத நிலையில் ‘திராணியார்’ என்று தே.மு.தி.க.வின் தொண்டர்களால் பராக்கிரமமாக அழைக்கப்பட்ட விஜயகாந்த் பரிதாபமாக அமர்ந்திருப்பதாக அரசியல் அரங்கில் அனல் விமர்சனம்.
என்ன பிரச்னை பாஸ்?
என்னதான் தி.மு.க.வை வார்த்தைக்கு வார்த்தை விமர்சித்தாலும் கூட, அக்கட்சியின் அடியொற்றியே அரசியல் செய்வதுதான் விஜயகாந்த் காலம் தொட்டு தே.மு.தி.க.வின் ஸ்டைல். அதிலும் குறிப்பாக பக்ரீத்துக்கு மட்டன் வழங்கி, ரம்ஜானுக்கு பிரியாணி வழங்கி! இஃப்தார் நோன்பில் கலந்து கொண்டு கஞ்சி பருகி, ஈஸ்டருக்கு ஸ்தோத்திரம் சொல்லி….என்று சிறுபான்மையினரை பெரிதாய் கவர் பண்ணுவதில் கில்லி.
அந்த வகையில் இந்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரேமலதா தன் கட்சியினர் மற்றும் மக்களுக்கு கேக் மற்றும் பிரியாணியை வழங்கினார். கரங்களில் ஒட்டியிருந்த கிரீமை துடைத்தபடியே நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னவர், ‘சமீபத்துல எங்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது (ரியலீ ?....) அதில் கலந்து கொண்ட நிர்வாகிகள், என்னை கட்சியின் செயல் தலைவர்! எனும் பொறுப்பை ஏற்க சொல்லி வலியுறுத்துகின்றனர். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேப்டன் வெளியிடுவார்.’ என்று போட்டாரே ஒரு போடு. கிறிஸ்துமஸும் அதுவுமா அந்தப் பக்கம் பிஸியா போயினு இருந்த சாண்டாகிளாஸே ஷாக்காகிட்டாரு அப்டியே!
பிரேமலதா ஓட்டிய இந்த திடீர் த்ரீ டி படத்தைப் பார்த்து தே.மு.தி.க.வின் மாநில நிர்வாகிகள் பலர் (இன்னுமா அங்கே அப்படி ஆளுங்க இருக்காங்க?ன்னு கேட்க கூடாது. அப்படியும் சிலர் இருக்கப் போய்தான் குறிப்பிடுறோம்.) வெறுத்தேப் போயுள்ளனராம்.
அன்று மாலையே அந்தந்த மண்டல நிர்வாகிகள் ஆங்காங்கே இன்ஃபார்மலாக கூட்டங்களைப் போட்டு கலந்து ஆலோசித்துள்ளனர். அப்போது, ‘ஏதோ கேப்டனின் முகத்துக்காகவும், அவர் மேலே வெச்சிருக்கிற பாசத்துக்காகவும் தான் இன்னும் இந்த கட்சியில உக்காந்துனு இருக்கோம். இந்தம்மாவுக்கு (அண்ணியாரேதான்) செயல்தலைவர் ஆகுற ஆசை வந்துடுச்சு. அதன் விளைவுதான், அன்னைக்கு கூட்டத்துல சில நிர்வாகிகள் இப்படி செயல் தலைவர் பதவியை ஏற்றுக்கோங்க!ன்னு கோரிக்கை வெச்சது.
ஆனால் ஏதோ தலைவர் கேப்டன் தான் எல்லாத்தையும் முடிவு பண்ற மாதிரி பேசுறாங்க இந்தம்மா. பாவம் கேப்டனுக்கு என்ன தெரியும்? பச்சக் கொயந்தயாட்டமா ஒக்காந்துனு இருக்கார் சிரிச்சபடியே. அவரை வெச்சுக்கிட்டு இப்படியெல்லாம் அரசியல் பண்ணலாமா தேவுடா!’ என்று பொங்கியிருக்கின்றனர் பலர்.
இவை அனைத்துமே உளவு நிர்வாகிகள் மூலமாக பிரேமலதாவின் காதுகளுக்குப் போக, அவர் புன்னகைத்தபடியே கடந்து சென்றுவிட்டாராம்.
இந்நிலையில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை கூட்டம் நடத்தி, பிரேமலதாவை விமர்சித்தவர்கள சில நிர்வாகிகள் விளாசியுள்ளனர் இப்படி….”கேப்டன் இப்படி சுகவீனப்பட்ட பிறகும் நானும், நீயும் கட்சிக் கரைவேட்டி கட்டிட்டு திரியுறோம்னா அதுக்கு காரணமே அண்ணியாரோட அரசியல் சாணக்கியத்தனம் தான். 2011 பொது தேர்தலுக்கு முன்னாடி கோடநாடுக்கு போயி ஜெயலலிதாவோடு ஆலோசனை பண்ணி, கூட்டணியை வெற்றிகரமா உருவாக்குனதே பிரேமலதாதான். நம்ம கட்சி தமிழக எதிர்க்கட்சி எனும் அந்தஸ்தில் உட்கார்ந்ததில் அண்ணியாரின் உழைப்பு மிகப்பெருசு. அவரோட சில முடிவுகள் தோல்வியை தந்திருக்கலாம். ஆனால் இப்பவும் நம்மை தேடி பெரிய கட்சிகள் வர ஒரே காரணம் கட்சியை அவர் இன்னமும் உயிரோட்டமா வெச்சிருக்கிறதுதான்.’ என்று அனலாக பேசி, அதிர வைத்துள்ளனர்.
சர்தான்!