
அதிமுகவின் இரு அணிகள் இணைந்து செயல்படுவதன் மூலம் ஆட்சி,கட்சி இரண்டையும் காப்பாற்ற முடியாது , இந்த ஆட்சி தொடர்ந்து 5 ஆண்டுகள் நீடிக்கும் என்று உத்தரவாதம் தரமுடியாது, எந்த நேரமும், எதுவும் நடக்கலாம் என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்தார்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இன்று இணைந்தன.
ஓபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், பாண்டியராஜனுக்கு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அணிகள் இணைப்பு குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருவரும் இணைந்துள்ளனர் என தெரிவித்தார்.
பொதுக்குழுவை கூட்ட பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், தன்னுடன் தொடர்பில் உள்ள எம்.எல்.ஏக்கள் இது தொடர்பாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து கொண்டு வருகின்றனர் என்றும் திவாகரன் தெரிவித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 122 எம்.எல்.ஏக்கள் இல்லை என்றும் அணிகள் இணைந்து செயல்படுவதன் மூலம் ஆட்சி,கட்சி இரண்டையும் காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும், ஆட்சி நீடிக்கும் என்று உத்தரவாதம் தர முடியாது என்று தெரிவித்த திவாகரன் , எந்த நேரமும், எதுவும் நடக்கலாம் என்று கூறினார்.