
அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இரட்டை இலை சின்னத்தை பெற ரூ50 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கை விசாரணை செய்து வரும் சிறப்பு நீதிபதியிடம் தொலைபேசியில் பேசிய மர்ம நபர் “இடைத்தரகர்” சுகேஷ் சந்திரசேகரை ஜாமீனில் விடக்கோரி பேரம் பேசியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க. அம்மாஅணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், டெல்லி இடைத்தரகர் சுகேஷுக்கு லஞ்சம் அளித்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் தினகரனின் பணப்பரிவர்த்தனை விஷயங்களை கவனித்து வந்த அவரது நண்பர் மல்லிகார்ஜுனனும் கைது செய்யப்பட்டார்.
தினகரன், மல்லிகார்ஜூனாவையும் டெல்லி போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் போலீஸ் காவலுக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பூனம் சௌதரி மே 1-ஆம் தேதி அவர்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தினகரனும், மல்லிகார்ஜூனாவும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன் வழங்கக்கோரி நீதிபதி பூனம் சவுத்ரிக்கு ஒரு மர்மநபர் செல்போனில் பேசி பேரம் நடத்தியுள்ளார். அதாவது, ஏப்ரல் 28-ந்தேதி சுகேஷ் சந்திரசேகரின் வழக்கை விசாரிப்பதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பாக இந்த அழைப்பு நீதிபதிக்கு வந்துள்ளது. ஆனால், அதன்பின், வழக்கை விசாரணை செய்த நீதிபதி, சுகேஷ் சந்திரசேகருக்கு 12-ந்தேதி வரை நீதிமன்றகாவல் விதித்தார்.
நீதிபதி பூனம் சவுத்ரி புகார் கொடுத்ததையடுத்து, போலீசார் அடையாளம் தெரியாத நபர் என்ற வகையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில், “ ஏப்ரல் 28-ந்தேதி நண்பகல் 1 மணி இருக்கும் நீதிபதி பூனம் சவுத்ரி அவரின் சேம்பரில் இருந்தார். அப்போது அவரின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உச்ச மன்ற நீதிபதியின் தனிச் ெசயாலாளர் என தன்னை அறிமுகம்செய்து கொண்டு பேசினார். நீதிபதி உங்களிடம் பேச விரும்புகிறார் மேலும், உள்துறை அமைச்சகத்தின் கொலிஜியம் பிரிவில் இருந்து பேசுகிறேன்,சுகேஷ் விவகாரம் உங்களிடத்தில் வந்துள்ளதாக அறிந்தேன். அவருக்கு உடனடியாக ஜாமீன் கொடுத்துவிடுங்கள் இல்லாவிடில் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிபதி சவுத்ரியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்தும், தனது பெயர் ஹனுமந்த் பிரசாத் என்றும் கூறி தேவைப்பட்டால் கூப்பிடலாம் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த எண்ணை நீதிபதி வாங்கவில்லை. அதன்பின் சிறிது நேரம் சென்றபின், நீதிபதி தனது செல்போன் எண்ணை சோதித்துபார்த்த போது, அதில் ஏராளமான “மிஸ்டுகால்” இருந்துள்ளது.
இதையடுத்து, உடனடியாக உச்ச நீதிமன்றத்துக்கு அழைப்புச் செய்து, நீதிபதியை அழைத்து தனக்கு மிரட்டல் வந்தது குறித்து கூறியுள்ளார். ஆனால், நீதிபதியோ தன்னுடைய அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு யாரும் அழைப்பு செய்யவில்லை, ஹனுமந்தப்பா என்ற பெயரில் யாரும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி போலீசார் ஐ.பி.சி. பிரிவு 170, 189, 507 மற்றும் 34 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிபதிக்கு அழைப்பு விடுத்த அந்த எண், அழைப்பு உள்ளிட்ட விசயங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.