
வீடியோ வெளியிட்டதில் தொடர்புடைய வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ங்க... என்று தமிழிசை நேரடியாகத் தாக்குதல் தொடுத்தார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டவர்கள் தொடர்பான வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.
இடைத் தேர்தலை பொறுத்த அளவில், இன்று வெளியிட்ட ஜெயலலிதாவின் சிகிச்சை பெறும் வீடியோ உள்நோக்கத்துடன் வெளியிடப் பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
எனவே, இந்த வீடியோவை வெளியிட்டவர் தொடர்பான வேட்பாளரை ஆர்.கே.நகரில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
இந்த விடியோவை வெளியிட்டவர், டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல். ஆனால், வெற்றிவேல் வெளியிட்டதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எங்களிடம் கேட்காமல் வெற்றிவேல் வெளியிட்டு விட்டார் என்று திசை திருப்புவதற்கான வேலைகளை ஏற்கெனவே தினகரன் தரப்பு உறவினர்கள் தொடங்கிவிட்டார்கள். இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, வெற்றிவேல் தன்னிச்சையாக இந்த வேலையில் ஈடுபட்டார் என்று நிறுவுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா இன்று செய்தியாளர்களிடம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவர் கொடுத்த விளக்கத்தில், ஜெயலலிதா சிகிச்சை குறித்த வீடியோ காட்சியை கொடுத்தது நாங்கள்தான் என தெரிவித்துள்ளார்.
வீடியோ எடுத்தது சசிகலாதான், விசாரணை ஆணையத்திடம் வீடியோவை கொடுக்கச் சொன்னது சசிகலாதான் என்றும், வீடியோ வெளியிட்ட வெற்றிவேலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார் கிருஷ்ணப்ரியா.
டி.டி.வி தினகரனிடம் கொடுத்த வீடியோ வெற்றிவேலிடம் எப்படி போனது என்று தெரியவில்லை; வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார் என்று இப்போது வெற்றிவேலை பலிகடாவாக்கி, தினகரனை தப்பிக்க வைக்கச் செய்யும் முயற்சியில் கிருஷ்ணபிரியா இறங்கியுள்ளார் என்றே தெரிகிறது.