
இரட்டை இலை மீட்பு முயற்சியில் தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைதாகியிருக்கும் டி.டி.வி.தினகரனை சென்னைக்கு அழைத்து வந்தும் விசாரணை செய்கிறது டெல்லி போலீஸ்.
இந்நிலையில் இன்று பிற்பகலில் இருந்து தமிழக அமைச்சர்கள் வட்டாரத்தில் ஒரு பரபரப்பு. அதாவது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சிலருக்கு பணம் கொடுத்து இரட்டை இலையை மீட்கலாம் என்று தனக்கு ஐடியா ரூட் போட்டு கொடுத்ததே சில அமைச்சர்கள்தான் என்றும், சுகாஷ் போன்ற இடைத்தரகர்களை தனக்கு இன்ட்ரோ கொடுத்ததும் சில அமைச்சர்கள்தான் என்றும் மாண்புமிகுக்கள் சிலரைப் பற்றி தினகரனிடமிருந்து திடுக் வாக்குமூலமொன்று டெல்லி போலீஸிடம் கூடிய சீக்கிரம் வந்து விழும் வாய்ப்பு அதிகமிருக்கிறது என்பதுதான் அது.
பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதை காரணமாக காட்டி தன்னையும், சசிகலாவையும் மிக மோசமாக கட்சியிலிருந்து அமைச்சர்கள் சிலர் ஓரங்கட்டி வருவதாக தினகரனுக்கு கடுப்பாம். தலைமை கழகத்தில் சசி பேனரை அகற்றியதோடு மட்டுமில்லாமல் அதற்கு சிலர் கூறிய காரணங்களெல்லாம் தினகரனை அதிகமாகவே கடுப்பாக்கிவிட்டது என்கிறார்கள்.
பன்னீர் அணி கூறுவதுபோல் சசி மற்றும் தினகரனை கட்சியிலிருந்து விலக்கி வைத்துவிட்டது போல் அமைச்சர்கள் நாடகம் போடுகிறார்கள். சசி மற்றும் தினகரனின் வழிகாட்டுதல் படியே இந்த ஒதுக்கி வைப்பு நாடகம் நடக்கிறது என்கிற வாதத்தை எடுத்துக் கொண்டாலும் கூட, அமைச்சர்கள் சிலரின் சமீபத்திய போக்கை தினகரனால் ஜீரணிக்கவே முடியவில்லை என்கிறார்கள்.
அதிலும், தான் கைதான பின் சில அமைச்சர்கள் செய்த காய் நகர்த்தல்களை கேள்விப்பட்டு செம ஷாக் ஆகிவிட்டாரம் செம கூல் தினகரன். ’இப்போதைக்கு சின்னம்மாவும் நானும் ஒதுங்கி இருப்பதாய் இருக்கிறோம். சூழல் சாதகமாகட்டும். அதுவரையில் இப்படியிப்படி செயல்படுங்கள்.’ என்று தினகரனிட்ட கட்டளைகளை சில அமைச்சர்கள் கண்டபடி அடித்து நொறுக்கி காலி செய்வதாக அவர் வருந்துகிறாராம்.
இப்படியே விட்டால் இவர்களின் ஆட்டம் ஓவராக போய்விடும் என்பதாலேயே, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விஷயத்தில் சில அமைச்சர்களின் கைகளும் இருக்கிறது எனும் அஸ்திரத்தை அவர் கையிலெடுத்து செக் வைக்கலாம் என்கிறார்கள். தினகரன் சொல்வது போல் அமைச்சர்களின் கைகள் சுகாஷ் விஷயத்தில் இருப்பது உண்மையா அல்லது பொய்யா என்பது துல்லியமாக தெரியவர சில காலம் ஆகும்.
ஆனால் அதற்குள் விசாரணை அதுயிதுவென்று அந்தந்த அமைச்சர்களின் பெயர்கள் மீடியாவால் டேமேஜ் ஆகும், இப்படியொரு சிக்கலில் சிக்கும் அமைச்சர்கள் தங்களுக்கு எதிராக ஓவராக ஆட்டம் போட நினைக்க கூட மாட்டார்கள் என்பதே தினகரன் தரப்பின் திட்டமாம்.
இந்த கான்செப்டில் இன்னொரு பார்வையும் இருக்கிறது. அதாவது தமிழகத்தில் அரசியல் ரீதியாக வலுவாக காலூன்ற நினைக்கும் சிலர், பணம் மற்றும் அதிகார ரீதியாக ஓவர் கெத்தில் இருக்கும் சில தமிழக அமைச்சர்களுக்கு செக் வைக்க நினைக்கிறார்களாம்.
அதற்கு தினகரனை பகடையாக பயன்படுத்தி ‘சுகாஷுக்கு கொடுக்கப்பட்ட முன் பணம் இந்த அமைச்சருடையதே, அந்த பணத்தை அவர் இந்தெந்த வழிகளில் தயார் செய்து சுகாஷின் கைகளில் சேர்த்தார்.” என்று ஒரு வாக்குமூலத்தை வாங்கி அதன் நீட்சியாக குறிப்பிட்ட மாண்புமிகுக்களின் வீட்டில் ரெய்டு மேளாவை நடத்த திட்டமிட்டுள்ளது என்பதுதான் அது.
தினகரனிடம் சென்னையில் விசாரணையை முடித்த பின் கொச்சின் மற்றும் பெங்களூருவிலும் அடுத்தடுத்து சில விசாரணை உருட்டல்கள் நடைபெறுமாம். தன் தலைக்கு மேல் தொங்கும் கத்தியை பாதுகாப்பாக கீழிறக்க நினைக்கும் தினகரன் இதற்கெல்லாம் ஓ.கே. சொல்லாமலா போய்விடுவார்? என்பதே இப்போதைய பரபரப்பு.
ஆக டெல்லியில் ஆரம்பித்து சென்னை, பெங்களூரு, கொச்சின் என்று தென்னிந்தியாவையே சுழற்றியாடும் இந்த பரபர மங்காத்தாவில் தினகரன் எடுத்துப்போடப்படும் சீட்டு என்ன? என்பது ஆர்வ அனலை கிளப்பியிருக்கிறது.
அமைச்சர்கள் வட்டாரத்தில் அலையடிக்கும் இந்த பரபரப்பு வதந்தியாக கரையை கடக்குமா அல்லது ரியல் சுனாமியாகி சுருட்டியெடுக்குமா என்பதை பொறுத்திருந்து கவனிப்போம்!