எடப்பாடி - பன்னீரை மன்னிக்கலாமா...? அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக தினகரன் கையிலெடுக்கும் ‘காடுவெட்டி’ ஆயுதம்..!

By Vishnu PriyaFirst Published Mar 13, 2019, 4:18 PM IST
Highlights

பிரேமலதா பொறாமையில் பொசுங்கி, மனசெல்லாம் புண்ணாகுமளவுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் ஏழு சீட்டுகளை அடிச்சு தூக்கி அலப்பறை செய்துவிட்டது ராமதாஸ் - அன்புமணியின் பா.ம.க. சென்னை பிரசார பொதுக்கூட்டத்தில் மோடியும் அதிக அன்பு செலுத்தியதால் டாக்டர்கள் இருவருக்கும் கைகால் பிடிபடவில்லை. 

ஏக சந்தோஷத்தில் இருந்த அவர்களுக்கு சமீபத்தில் காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் கொடுத்த பேட்டியானது வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

‘2011-ம் ஆண்டில் ராமதாஸின் வீட்டில் நடந்த பார்ட்டியில் குருவுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு பதார்த்தத்தில் ஸ்லோபாய்சனை வைத்துவிட்டனர். அதனாலேயே என் அண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலனை இழந்து செத்தேவிட்டார். அவரை மருத்துவ கொலை செய்துவிட்டனர்.’ என்று குருவின் தங்கை மீனாட்சி பற்ற வைத்த பட்டாசு வெடித்து விளையாடுகிறது அ.தி.மு.க.வின் கூட்டணியில்.

 

இந்நிலையில், ராமதாஸுக்கு எதிராக குரு குடும்பத்தை தூண்டி விடுவதே தினகரன் தான், அவரது கையில்தான் காடுவெட்டியின் குடும்பம் இருக்கிறது! என்று சிலர் கொளுத்திப் போட்டுள்ளனர். குரு குடும்பத்தை தினகரன் ஏன் கையில் வைத்திருக்க வேண்டும்? எனும் கேள்விக்கு அவர்கள் சொல்லும் விளக்கங்கள்...”அ.தி.மு.க. நிற்கப்போகும் எல்லா தொகுதிகளிலும் தோற்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் தினகரன், அதன் கூட்டணி கட்சிகளும் தோற்க வேண்டும் என நினைக்கிறார். அதனால் ‘அம்மாவுக்கு எதிரான நபர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் பழனிசாமியும், பன்னீரும்.’ என்று ஆதாரத்தோடு பேசிவருகிறார். 

ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் குமாரசாமி கொடுத்த விடுதலை தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசை முறையீடுக்கு போக சொல்லி அழுத்தம் கொடுத்ததில் பா.ம.க.வின் கையும் முக்கியமானது. அப்போது கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையாவை ஜி.கே.மணி உள்ளிட்ட தன் நிர்வாகிகள் சிலரை அனுப்பி சந்திக்க வைத்தார் ராமதாஸ். அவர்களும் டாக்டர் கொடுத்து அனுப்பிய ‘ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யுங்கள்.’ எனும் கோரிக்கை மனுவை கொடுத்ததோடு, எப்படியான சட்ட பாயிண்டுகளையெல்லாம் வைத்தால் ஜெயலலிதாவுக்கு தண்டனை பெற்று தரமுடியும்? என்று சில நுணுக்கங்களையும் குறிப்பிட்டு ஒரு ஃபைலையும் கொடுத்துவிட்டிருந்தார்ல், இதுவும் சித்தராமையாவிடம் தரப்பட்டது. அதையும் சேர்த்துக் கொண்டுதான் அப்பீலுக்கு போனார் சித்தராமையா. 

மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தனக்கு எதிராக உள்ளது, சிறை உறுதி! எனும் தகவல் தெரிந்த பின்புதான் ஜெயலலிதாவின் உடல்நலன் மளமளவென சரிந்து ஒரு கட்டத்தில் கடுமையாய் நோயுற்று இறந்தார்.  இதைத்தான் எடப்பாடி - பன்னீர் டீமுக்கு எதிராக பிடியாய் பிடித்துக் கொண்டுள்ளார்  தினகரன் “அம்மாவின் அநியாய சிறை தண்டனை தீர்ப்புக்கும், அவரின் மரணத்துக்கும் காரணமானவர்களுடன் கூட்டணி அமைத்திருக்கும் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.” என்று சொல்லியேதான் அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மனதில் உணர்ச்சியை முதல்வர்களுக்கு எதிராக தூண்டுகிறார். 

இந்த ஆபரேஷனுக்கு ராமதாஸின் எதிர் டீமின் சப்போர்ட் கூடுதல் பலன் சேர்க்கும். ராமதாஸ் நிற்கும் தொகுதிகளில் அவர்களின் வெற்றி வாய்ப்பை குரு குடும்பத்தின் மூலம் பாழாக்கினால், வெறுப்பின் உச்சம் செல்லும் அவர்கள் அ.தி.மு.க.வின் வெற்றிக்காக நாட்டம் காட்டி உழைக்க மாட்டார்கள்! என்பது தினகரனின் கணக்கு. 

அதனால்தான் குரு குடும்பத்தை தன் கையில் வைத்துள்ளார். குருவின் குடும்பத்தை இந்த பிரஸ்மீட்டோடு விட்டுவிட மாட்டார், தேர்தல் பிரசாரத்துக்கும் நிச்சயம் பயனப்டுத்துவார். பா.ம.க. விஷயத்தில் இப்படியொரு துருப்பு சீட்டை பயன்படுத்துபவர், தே.மு.தி.க., த.மா.கா. என அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றின் நிம்மதிக்கும் இடைஞ்சல் தர திட்டமிட்டுள்ளார். பி.ஜே.பி.யிடம் மட்டும் சிக்கல் வெச்சுக்க மாட்டார்!” என்கிறார்கள். ப்பார்றா!

click me!