’என்னைப்போல ஸ்டாலினுக்கு தைரியம் உண்டா..?’ வெளுத்து வாங்கும் டி.டி.வி..!

By Thiraviaraj RMFirst Published Apr 8, 2019, 11:30 AM IST
Highlights

பா.ஜ.க.வுடன் வாழ்நாளில் கூட்டணி கிடையாது என கூறுகிறோம். இதை ஸ்டாலின் கூற முடியுமா? ஸ்டாலினுக்கு தைரியம் உண்டா? பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என அறிவிப்பாரா? என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க.வுடன் வாழ்நாளில் கூட்டணி கிடையாது என கூறுகிறோம். இதை ஸ்டாலின் கூற முடியுமா? ஸ்டாலினுக்கு தைரியம் உண்டா? பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என அறிவிப்பாரா? என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ’’தேசிய கட்சிகளிடம் தமிழக மக்கள் ஏமாறாதீர்கள். ஜாதி, மதங்களை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் நலன்களை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.  மோடியை டாடி என சொல்கின்ற எடப்பாடி, பன்னீர் கம்பெனி கூட்டணி வைத்துள்ளார்கள். மற்றொரு கூட்டணி மதசார்பற்ற கூட்டணி. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்கிறார். 

அந்த கூட்டணி கட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமராக அறிவிக்காத கம்யூனிஸ்ட் கேரளத்தில் ராகுல் போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்காமல் விடமாட்டேன் என்று பினராயி விஜயன் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியே ராகுலை பிரதமராக அறிவித்ததாக தெரியவில்லை. எதையாவது செய்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடவேண்டும் என நினைக்கிறார்கள். 

முக்கிய துறைகளை வைத்திருந்த திமுக சொந்த மக்களை மட்டுமே பார்த்துக்கொண்டது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் என கூறியவர்களை சிறுபான்மையினர் புறக்கணித்ததால் ஆர்.கே.நகரில் டெப்பாசிட் போனது. தமிழகத்தை புறக்கணித்த மோடி மற்றும் பா.ஜ.க.வுடன் வாழ்நாளில் கூட்டணி கிடையாது என கூறுகிறோம். இதை ஸ்டாலின் கூற முடியுமா? ஸ்டாலினுக்கு தைரியம் உண்டா? பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என அறிவிப்பாரா?

தேசிய கட்சிகளை நம்பி ஏமாறவேண்டாம். தமிழர்கள் தலைநிமிர, சிறுபான்மை மக்கள் நலனுக்காக, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள கட்சி அ.ம.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி 37 தொகுதிகளிலும் வெற்றிபெறபோகும் கட்சி எது என நீங்கள் முடிவு செய்யுங்கள். குழப்பம் வேண்டாம் அமமுக இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். ஜாதி, சிறுபான்மை பெரும்பான்மை கடந்து வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். உங்களை சிலர் குழப்புவார்கள் நீங்கள் குழம்ப வேண்டாம்.

பொறியாளர்களுக்கு வேலை, ரப்பர் பூங்கா, மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். பெட்டக துறைமுகத்தை தேர்தல் அறிக்கையிலேயே எதிர்க்கிறோம். வரவிடாமல் தடுக்க நாங்கள் போராடுவோம். சென்னை முதல் குமரி வரை கிளைகள் இல்லாத ஊர்களே இல்லை. எங்களுக்கு சின்னம் கொடுக்க மோடி அரசு இடைஞ்சல் கொடுத்தது. நீதிமன்றம் மூலம் கிடைத்தது பரிசு பெட்டகம். தேசிய கட்சிகளிடம் ஏமாறாதீர்கள். மதங்களை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் நலன்களை மனதில் கொள்ள வேண்டும்’’ என அவர் கூறினார். 

click me!