
ஆறுமுகசாமி ஆணையத்தின் 78 கேள்விகள்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுக சாமி ஆணையம் 2 ஆண்டுகளுக்கு பிறகு தனது விசாரணையை கடந்த வாரம் துவக்கியது, இதில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் நேற்றைய தினம் அவர் ஆஜர் ஆகி இருந்தார்... மேலும் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி மற்றும் அவரது மகன் விவேக் ஆகியோர் நேற்று ஆஜர் ஆகி இருந்தனர். அவர்களிடம் நேற்று கேள்விகள் கேட்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்திடன், நேற்று காலையில் இரண்டு மணி நேரம், மாலை ஒன்றரை மணி நேரம் என மொத்தம் மூன்றரை மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி ஆறுமுகசாமி மற்றும் ஆணைய வழக்கறிஞர்கள் கேட்ட சுமார் 78 கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார்.
2 வது நாளாக ஆஜர்
குறிப்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது ? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் தனக்கு தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார். மேலும் 2016 செப்டம் 22 -ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் தனக்கு தெரியாது எனவும், சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் என் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டதாகவும், அடுத்த நாள் பிற்பகலில் அப்பல்லோ மருத்துவமனை சென்ற போது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்தேன் எனவும் தெரிவித்திருந்தார். மூன்றரை மணி நேர விசாரணை மற்றும் 78 கேள்விகளுக்கு பிறகு, ஓபிஎஸ் இன்று மீண்டும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டது. . இதன் படி காலை 10.30 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகினார்.
ஜெயலலிதா தான் கைரேகை வைத்தார்
ஆறுமுகசாமி ஆணையம் சார்பாக ஓபிஎஸ் யிடம் 2வது நாளாக விசாரணை நடைபெற்றது. அப்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்துரபாண்டியன், அப்போலோ தரப்பு வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா இருவரும் இன்று குறுக்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அறவக்குறிச்சி ஆகிய மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதா தான் என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார். மேலும் இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் எனவும் மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு சில முறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்ததாகவும், இதனை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்ததாகவும், பொதுவெளியில் எங்கும் நான் பேசவில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவித தகவலையும் தன்னிடம் தெரிவிக்கவில்லையென்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது எனவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.