உச்ச நீதிமன்றத்தீர்ப்பால் மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் பதவி பறிபோகுமா?

By Selvanayagam PFirst Published Oct 2, 2019, 12:01 AM IST
Highlights

இரு கிரிமினல் வழக்குகளை மறைத்து 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

கடந்த 2014-ம் ஆண்டு மகராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவேந்திர பட்நாவிஸ் தனது வேட்புமனுவில் தன் மீதுள்ள இரு கிரிமினல் வழக்குகளைக் குறிப்பிடாமல் இருந்தார். இது தொடர்பாக சதீஸ் உகே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கடந்த 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் இரு மோசடி, கிரிமினல் வழக்குகள் தேவேந்திர பட்நாவிஸ் பதிவு செய்யப்பட்டு இருந்ததை வேட்புமனுவில் மறைத்துவிட்டார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியுள்ளதால் அவர் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் குற்றச்சாட்டு ஏதும் பதிவு செய்யப்படாததால், அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சதீஸ் உகே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து பட்நாவிஸ் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரினார். இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை மாதம் முடிந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில், "மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்கிறோம். தேவேந்திர பட்நாவிஸ் தன் மீது நிலுவையில் இருக்கும் இரு கிரிமினல் வழக்குகளின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டது.

இதற்கிடையே பட்நாவி்ஸ் தன் மீதான இரு வழக்கு விசாரணையிலும் நேரில் ஆஜராக உள்ளார். மகாராஷ்டிரா அரசின் பதவிக்காலம் வரும் நவம்பர் 9-ம் தேதியோடு முடிகிறது. அக்டோபர் 21-ம் தேதி 288 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

இந்த சூழலில் தேவேந்திர பட்நாவி்ஸ்க்கு நெருக்கடி அளிக்கும் வகையில் தீ்ர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கில் விரைவாக விசாரிக்கப்பட்டு வேட்புமனுவில் தவறான தகவல்களை குறிப்பிட்டது உண்மையென்றால், தேவேந்திர பட்நாவிஸ் முதல்பதவி பறிபோகலாம்.

தேர்தல் சட்டத்தின்படி, வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், மூடி மறைத்தால், அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும், அல்லது தேர்தலில் கிடைத்த வெற்றி செல்லாது என அறிவித்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!