
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று காலை போயஸ் கார்டன் சென்றார். இதை அறிந்ததும், அனைத்து பத்திரிகை, ஊடக செய்தியாளர்கள் அங்கு சென்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
போயஸ் கார்டன் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை என தீபா குற்றஞ்சாட்டினார். இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்தது. அப்போது செய்தியாளர்களிடம் கூறிய தீபா, தனது சகோதரன் தீபக், போன் செய்து போயஸ் கார்டன் வரவழைத்ததாகவும், அங்கு வந்த போது சிலர் தன்னையும், பாதுகாவலரையும் தாக்கியதாக கூறினார்.
இதுகுறித்து தீபாவின் சகோதரர் தீபக்கை தொடர்பு கொண்டு கேட்டபோது, எங்களது அத்தை ஜெயலலதாவுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்வதற்காக தீபாவை நான் அழைத்தேன்.
1991ம் ஆண்டுக்கு முன் ஜெயலலிதா வாங்கிய அனைத்து சொத்துக்களுக்கும் நானும், தீபாவும் மட்டுமே வாரிசு. இதில் யாருக்கும் உரிமை இல்லை.
இது எங்களுக்குள் உள்ள குடும்ப சண்டை. இதை பற்றி பிரதமரிடம் போய் தீபா முறையிடுவாரா. இதற்கு அவர் துவங்கியுள்ள எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை பயன்படுத்துவாரா என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தை பொறுத்தவரை தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் எந்த குறையும் இல்லை. நல்லமுறையில் நடந்து வருகிறது.
பின்னர், எதற்காக டிடிவி.தினகரனின் ஆட்சியை விரும்ப வேண்டும். டிடிவி.தினகரன் தேவையே இல்லை. எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவைவிட, சிறந்த தலைவராக திமுக தலைவர் கருணாநிதி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.