
சமீபத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் அதிர்ச்சியை உருவாக்கிய விவகாரம் ஜெ. தீபா தனது நெருங்கிய நண்பரும், பேரவையில் தனக்கு எல்லாமுமாக இருந்தவருமான ராஜவை நீக்கியது (அவ்வ்வ்வ்...எப்டியெல்லாம் ஒரு நியூஸுக்கு பில்ட் - அப் கொடுக்க வேண்டியிருக்குது).
பேரவை பேய்த்தனமாக சர்வதேசமெங்கும் வளர்ந்து வரும் நிலையில் இப்படி முக்கிய விக்கெட்டை தீபாவே வீழ்த்தியதில் அவரது இயக்கத்தினர் சலசலத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் ஆயில் ராஜா நீக்கம் ஏன்? எனும் பொக்கிஷமான கேள்விக்கு பொலபொலவென கண்ணீருடன் பொளேரென பதிலளித்திருக்கும் பேபிம்மாவான தீபா...”இந்த நடவடிக்கையில் எனக்கு துளியும் விருப்பமில்லை. ஆனால் ராஜாவின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்ததால் இப்படி எடுக்கவேண்டியதா போச்சு.
என்னுடைய பேரவை மாவட்ட செயலாளர்களே ‘அந்தாளை நீக்காவிட்டா நாங்க கூண்டோட ராஜினாமா பண்ணிடுவோம். உங்க வீட்டையும் முற்றுகையிடுவோம்.’-ன்னு மிரட்டுனாங்க.
இனிமேலும் ராஜா பேரவைக்கு இருந்தால் அவருக்கு எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் அப்படிங்கிறதை கணிச்சே இந்த நடவடிக்கையை நான் எடுத்தேன்.
ஏற்கனவே ராஜா மேலே ரெண்டு கேஸ் பதிவாகியிருக்குது. மூணாவதா ஒண்ணு ஃபைலானால், ஜாமீன் கிடைக்குறது சிக்கலாகிடும். அதனாலதான் அந்த முடிவெடுத்தேன். பட்! அதுக்காக இப்போ ஃபீல் பண்றேன்.
உண்மையை சொல்றதுன்னா என் பேரவை என் கட்டுப்பாட்டில் இல்லை. பொதுவா தலைமைக்கு கீழேதான் நிர்வாகிகள் இருக்கணும். ஆனா இங்கேயோ நிலைமை தலைகீழா இருக்குது. சசிகலா, தினகரன், எடப்பாடியோட ஸ்லீப்பர் செல்கள் இங்கே இருக்கிறாங்க. அவங்களை அடையாளம் காட்டுனது ராஜாதான். ஆனா அந்த ராஜா மேலே அடுக்கடுக்கான புகார் சொல்லி கட்டங்கட்ட வெச்சுட்டாங்க.
பலரும் என்னை என் அத்தையோட பிம்பத்தோடு ஒப்பிட்டு குழப்பிக்கிறாங்க. நான் அப்படியில்லை. என்னை எப்போ வேணா சந்திக்கலாம். மக்களோடு இணக்கமாக இருக்கவே விரும்புறேன்.
ராஜாவை நீக்குவதற்கான அழுத்தத்தை மாதவனும்தான் கொடுத்தார். என்னை சுற்றி என்ன நடக்குதுன்னே புரியலை! யாரை நம்புறது, யாரை வெளியேத்துறதுன்னே புரியலை.
எனக்கு கிராமப்புறங்களில் இருக்கும் ஆதரவு இன்னும் பெருகி நான் உள்ளாட்சி தேர்தலில் தாறுமாறாக ஜெயித்துவிடக்கூடாது அப்படிங்கிறதுல சசிகலா டீமும், எடப்பாடி - ஓ.பி.எஸ். டீமும் குறியா இருக்கிறாங்க. ஆனா அவங்க எண்ணம் பலிக்கவே பலிக்காது.
நான் இந்த கஷ்டங்களில் இருந்து மீள்வேன்.” என கெத்து காட்டியிருக்கிறார் தீபா.
சர்தான்!...