
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளராகவும், தமிழக சட்டத்துறை அமைச்சராகவும் இருப்பவர் சி.வி.சண்முகம். இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய மர்ம நபர் அமைச்சர் சி.வி.சண்முகத்தை இன்னும் 2 நாட்களில் கூலிப்படையின் மூலம் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தை சேர்ந்த கங்காதரன் ( 45) என்பது தெரியவந்தது. உடனே விழுப்புரம் போலீசார் திருச்சிக்கு விரைந்து அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், குடிபோதையில் அமைச்சரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து கங்காதரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.