நாக்கை அறுத்து, தலையை துண்டிக்கக் கிளம்பியதெல்லாம் குற்றமில்லையா..? ரிலீஸ் பண்ணு... இல்ல அரெஸ்ட் பண்ணு..!

By Thiraviaraj RMFirst Published Jan 2, 2020, 11:26 AM IST
Highlights

நெல்லை கண்ணனை கைது செய்த காவல்துறை வன்முறையைத் தூண்டிய உரைகளை ஆற்றிய ராஜேந்திர பாலாஜி, ஹெச்.ராஜா. நைனார் நாகேந்திரனை ஏன் கைது செய்யவில்லை? என மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’பிரபல இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன் பாஜகவினர் புடைசூழப் பெரம்பலூரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் உரையாற்றிய போது வன்முறையை தூண்டியதாகக் குற்றஞ்சாட்டி நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்முறையைத் தூண்டும் பேச்சுக்காக ஒருவர் கைது செய்யப்பட வேண்டுமெனில் நெல்லையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் நைனார் நாகேந்திரன் கவிஞர் வைரமுத்து அவர்களின் தலையை வெட்ட வேண்டும் என்று பேசிய போது, அதற்காகத் தமிழகக் காவல்துறையால் ஏன் இன்னும் கைதுச் செய்யப்படவில்லை.?? கவிஞர் வைரமுத்துவின் தலை இதுவரை உருண்டிருக்க வேண்டாமா என்றும், அவரை வேசிமகன் என்றும் பேசியவர் பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.
 
அவர் சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் வளாகத்திற்குள்ளிருந்து கல் வீசப்பட்டால் வெளியிலிருந்து உள்ளே  குண்டுகள் பாயும் என்றும் மாணவர்களுக்குக் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். தந்தை பெரியாரிலிருந்து  உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை பலரையும் இழிவுபடுத்தி  தொடர்ந்து வன்முறையைத் தூண்டுவதையே  வாடிக்கையாகக் கொண்டிருக்கும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை.

பெண்பத்திரிகையாளர்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசிய பாஜகவைச் சேர்ந்த சிரிப்பு நடிகர் எஸ்.வி. சேகரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் காவல்துறை கைது செய்யவில்லை. பெண்களைப் பார்ப்பதற்காகவே மாணவர்கள் போராட்டத்திற்கு வருகிறார்கள் என்று மாணவர்களை இழிவுபடுத்திப் பேசிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஏன் கைது செய்யப்படவில்லை. கமலஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூரைச் சுட்டுத் தள்ள வேண்டும் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை?

நெல்லை கண்ணன் ஆற்றிய உரை வன்முறையைத் தூண்டும் பேச்சு என்றால் ராஜேந்திர பாலாஜி, ஹெச் ராஜா, நைனார் நாகேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன்  முதலியோரின் பேச்சுகளை அகிம்சை வளர்க்கும் பேச்சுகளாகத் தமிழகக் காவல்துறை கருதுகிறதா? சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற நமது அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிராகப் பாரபட்சமான முறையில் நெல்லை கண்ணன் கைது விவகாரத்தில் தமிழகக் காவல்துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது.  உடனடியாக நெல்லை கண்ணன் அவர்களை விடுதலைச் செய்ய வேண்டுமென்று கோருகிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!