
இந்தியர்கள் பெட்ரோல், டீசல் விலையை பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்று பாஜகவின் சி.டி. ரவியின் கருத்து விமர்சனத்துக்கு பதிலாக கேலி, கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட போது கடும் கண்டனம் எழுப்பிய கட்சி. ஒருபடி மேலே சென்று நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களையும், கண்டன கூட்டங்களையும் முன் எடுத்தது.
ஆனால் இப்போது காலம் மாற.. பாஜக மத்தியில் இருக்கிறது. வழக்கம் போல பெட்ரோல், டீசல் உயர்ந்து கொண்டே செல்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை கடந்து எங்கோ சென்று கொண்டு இருக்கிறது. டீசல் விலையோ இப்பவோ, அப்பவோ என 100 ரூபாயை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் உள்ளதால் வாகன ஓட்டிகள் தலையில் துண்டை போடாத குறையாக உள்ளனர். எரிபொருள் விலையேற்றத்தில் மக்களின் அத்தியாவசிய பொருட்களும் சத்தமில்லாமல் விலையேறி கொண்டே இருக்கிறது.
இந் நிலையில் உண்மையான இந்தியர்கள் பெட்ரோல், டீசல் விலையை பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்று தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவியின் கருத்து விமர்சனத்துக்கு பதிலாக கேலி, கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.
அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் வடமாநிலத்தில் உள்ள இருவர் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது, அதனால் சாலைகள் உலக தரம் வாய்ந்ததாக இருக்கிறது என்று பேசுகின்றனர். இந்த வீடியோவை மேற்கோள் காட்டி உண்மையான இந்தியர்கள் என்பவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி பெரிதாக நினைக்கவோ, கவலைப்படவோ மாட்டார்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் ஆட்சியில் வரி செலுத்துபவர்களின் பணம் அனைத்தும் உலக தரத்துக்கு ஈடான சாலைகள் கட்ட செலவிடப்படுகிறது என்றும் கூறி உள்ளார். அவ்வளவு தான் இந்த கருத்துக்கு விமர்சனங்களை விட கேலி, கிண்டல்கள் தான் அதிகம் உள்ளன.
இது முன்பே சொல்லி வைத்து எடுக்கப்பட்ட வீடியோ, நன்றாகவே தெரிகிறது என்று ஒரு அன்பர் பதிவிட்டு உள்ளார். காமெடி நபர், காமெடியாகவே எதையாவது எழுதுகிறார், தமிழகத்தில் பாஜக இல்லை ஆனாலும் சாலைகள் அற்புதமாக இருக்கின்றன என்று மற்றொருவர் பதிவிட்டு உள்ளார்.
வேறு ஒருவரோ காங்கிரஸ் காலத்தில் சுங்கசாவடி பணம் பெட்ரோல், டீசல் விலையை விட அதிகமாக இருந்தது. ஆனால் இப்போதோ பெட்ரோல், டீசல் விலை சுங்கச்சாவடிகளை விட அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.