கொரோனா, 100 ஆண்டுகளில் இல்லாத சமூக, பொருளாதார பாதிப்பை ஏற்படுத்திவிட்டது...!! ரிசர்வ் வங்கி ஆளுநர் கவலை..!!

By Ezhilarasan BabuFirst Published Jul 11, 2020, 1:23 PM IST
Highlights

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொரோனா மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொரோனா மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ஆனால் நெருக்கடியிலிருந்து வங்கிகளை மீட்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். எஸ்பிஐ வங்கியின் ஆறாவது  பொருளாதார மாநாட்டில் ஆர்பிஐ ஆளுநர் சக்தி  காந்த் தாஸ் இன்று உரையாற்றினார். கொரோனோ தொற்றுநோயை கருத்தில்கொண்டு இந்தக் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பொருளாதாரம் மற்றும் நிதித்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாள் நடைபெறவுள்ள இந்த மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது, இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கம் என்ன என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸ் மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது உற்பத்தி, தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் இந்த வைரசால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அதுபோன்ற  பாதிப்புக்கு ஆளாகி உள்ளது, தற்போதைய நெருக்கடியில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். வங்கியின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும் வளர்ந்து வரும் அபாயங்களை அடையாளம் காண, ரிசர்வ் வங்கி அதன் ஆப்சைட் கண்காணிப்பு முறைகளை வளப்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மூலதனத்தை அழித்து, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என சக்தி தாஸ் கூறியுள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்திய பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. ஆனாலும் தற்போதைக்கு ஒரு நிலையற்ற தன்மையே நிலவுகிறது. மேலும், ஊரடங்கு போன்ற நெருக்கடியான நேரத்திலும் இந்திய தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டன. இந்த சவாலான காலங்களில் வங்கிகள் தங்கள் நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டும் மற்றும் நிர்வாகத்தை கூர்மைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தற்போது உள்ள நிலைமையை சீர்படுத்த வங்கிகளும் மூலதனத்தை எதிர்பார்ப்பு அடிப்படையில் திரட்ட வேண்டும் என சக்தி தாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!