ஒருங்கிணைத்து செல்பவரே முதல்வராக வேண்டும்: சி.ஆர். சரஸ்வதி

First Published Aug 23, 2017, 2:18 PM IST
Highlights
Coordinator should be the Chief Minister


முதலமைச்சர் என்பவர் எல்லோரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என்றும், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று சொல்வது கட்சியில் இருந்து யாரும் பிரிந்து செல்லக் கூடாது என்பதற்காகத்தான் என்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி
கூறியுள்ளார்.

நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு அதிமுகவின் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இணைப்பு நடைபெற்றது. இந்த இணைப்பில், கழக தொண்டர்கள் உற்சாகமடைந்ததாக கூறப்பட்டாலும், டிடிவி தினகரன் தரப்பினர் அதிருப்திக்கு ஆளாகினர்.

விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என்றும், அப்போது சசிகலாவை நீக்க முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால், மேலும் கலக்கமடைந்த டிடிவி தினகரன் அணியினர், எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதவை வாபஸ் பெறுவதாக கூறினர். மேலும், ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தது சசிகலா தான் என்றும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., துரோகமிழைத்து விட்டதாகவும் டிடிவி அணியினர் கூறி வந்தனர்.

அணிகள் இணைப்புக்குப் பிறகு, சசிகலா நீக்கப்படுவார் என்று கூறியதற்கு, விளக்கம் அளிக்க வேண்டும் என்று சி.ஆர். சரஸ்வதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று சென்னை, அடையாறில், சி.ஆர். சரஸ்வதி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கும்போது தலைவர்கள் ஏன் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் என்பவர் எல்லோரையும் ஒருங்கிணைத்து செல்லவேண்டும். முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று சொல்வது கட்சியில் இருந்து யாரும் பிரிந்து செல்லக் கூடாது என்பதற்காகத்தான் என்றும் சி.ஆர். சரஸ்வதி கூறினார்.

click me!