இந்த அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது? அநாகரீகத்தின் உச்சத்துக்கே போய்விட்டார்! கே.பாலகிருஷ்ணன் விளாசல்

By vinoth kumar  |  First Published Jan 21, 2024, 7:26 AM IST

அநாகரீக நடத்தையை பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கண்டித்துள்ள பிறகும், அண்ணாமலை தனது பேச்சை நியாயப்படுத்தியுள்ளார். கொங்கு பகுதி மக்களையும், கிராமப்புற மக்களையும் அதற்கு ஆதரவாக குறிப்பிட்டு அவமதித்துள்ளார்.


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரிகமாக பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சமீபத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் நெறியாளர் குறித்து அநாகரீகமாக பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.  பத்திரிக்கையாளர் கார்த்திகை செல்வன், செய்தியாளராக பல நிலைகளில் பணியாற்றி தற்போது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக உள்ளார். பல்வேறு தலைப்புகளில் விவாத நிகழ்ச்சிகளையும், நேர்காணல்களையும் நெறியாள்கை செய்வதில் தனக்கென்று தனிப்பாணியை உருவாக்கி நற்பெயர் எடுத்தவர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தமிழக மக்களின் பாதுகாப்புக்கு கேள்வி குறி.! ஆராஜகத்தில் ஆளுங்கட்சி... நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம்- சசிகலா

அவரை நோக்கி முற்றிலும் அநாகரீகமாக, தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதற்கான அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது?. அவர் சார்ந்துள்ள பாஜக, ஒன்றிய அரசாக உள்ளது என்பது தரமற்று பேசுவதற்கான உரிமத்தை வழங்குகிறதா? இந்த அநாகரீக நடத்தையை பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கண்டித்துள்ள பிறகும், அண்ணாமலை தனது பேச்சை நியாயப்படுத்தியுள்ளார். கொங்கு பகுதி மக்களையும், கிராமப்புற மக்களையும் அதற்கு ஆதரவாக குறிப்பிட்டு அவமதித்துள்ளார்.

பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின்னர், இதுபோல அநாகரீகமாக பேசுவதும், ஊடகங்களை தரந்தாழ்ந்து விமர்சிப்பதும் இது முதல்முறை அல்ல. ஊடக நிருபர்கள் குரங்கு போல் தாவுகிறார்கள் என்றார்; தனது ரபேல் கைக்கடிகாரத்திற்கு கணக்குக்காட்ட முடியாத போது புதிய தலைமுறை நிருபரை நோக்கி அநாகரீகமாக கூச்சலிட்டார்; ஊடக நிருபர்களை நோக்கி பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என செய்தியாளர் சந்திப்பிலேயே பேசி அவமதித்தார். 

இதையும் படிங்க;-  திமுகவில் இருந்து கொண்டு தரக்குறைவு பற்றி பேச உங்களுக்கெல்லாம் தகுதியே இல்லை.. கனிமொழிக்கு அண்ணாமலை பதிலடி.!

இதுபோல வேண்டுமென்றே தொடர்ந்து கண்ணியமற்று பேசிவரும் அண்ணாமலை இப்போது அநாகரீகத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளார். மாறுபட்ட கொள்கைகள் இருந்தாலும், கண்ணியம் தவறக் கூடாது என்பது அரசியல் நியதி. பாஜகவும், அதன் தலைவரும் இந்த நியதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக தங்களைக் கருதிக்கொள்கின்றனர்.  அண்ணாமலையின் இந்தப் போக்கினை வன்மையாக கண்டிப்பதுடன், பொது வெளியில் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

click me!