
தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிப்பது...என்பார்களே அந்த ஸ்டைலில்தான் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸகரை வருமான வரித்துறை ரவுண்டு கட்டி விசாரணை செய்து வந்தது. அவரது வீட்டினுள் நாட்கணக்கில் குடியிருந்து ரெய்டு நடத்தியவர்கள், பிறகு தங்கள் அலுவலகத்திற்கு வரைவைத்து விசாரித்தார்கள். இதில் தலைசுற்றிய விஜய்யை சற்றே இளைப்பாற விட்டு மீண்டும் விசாரணைக்கு அழைத்தார்கள் பின் அவர் மனைவியையும் அழைத்து விசாரித்தார்கள்.
ஆக அமைச்சர் விஜையை விடாது ஐ.டி. என்று பேச்சுகள் போய்க் கொண்டிருந்த நிலையில் இப்போது இந்த விவகாரம் வேறு லெவலுக்கு போய்விட்டது. ஆம் விஜயபாஸ்கரின் நண்பர் என்று அடையாளம் காட்டப்படும் மோகனூர் சுப்பிரமணியன் மர்மமான முறையில் இறந்துவிட, விஜயபாஸ்கர் விவகாரம் டாப் கியருக்கு மாறியுள்ளது.
அமைச்சர் வீட்டில் ரெய்டு நடந்தபோதே இவர் வீட்டிலும் ரெய்டு நடந்திருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஒப்பந்தக்காரரான இவர் விஜயபாஸ்கருக்கு மிக நெருக்கம் என்கிறார்கள். இருவருக்குமிடையில் பிஸ்னஸ் மற்றும் பண போக்குவரத்துகள் அதிகமிருந்தது என்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் விஜயபாஸ்கரை குறி வைத்து டார்கெட் செய்தபோது இவர் வீட்டையும் அலசியிருக்கிறார்கள்.
விஜய் விவகாரத்தில் இவரிடம் விசாரிக்க வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கிறது எனும் நிலையில்தான் இவரது மர்ம மரணம் நிகழ்ந்திருக்கிறது. சுப்பிரமணியன் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று அவரது குடும்ப தரப்பு கூறினாலும் அது அப்படியே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவருக்கு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள், அழுத்தங்கள் அல்லது மிரட்டல்கள் ஏதேனு இருந்ததா? மிரட்டல்களால் தற்கொலை செய்தாரா? என்றெல்லாம் விசாரணை விரிகிறது. எது எப்படியோ இவரது மரணம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஒரு தலைவலிதான் என்கிறார்கள் விபரமறிந்தோர்.
நிற்க! தமிழக அரசியலில் ஊழல், சொத்துக்குவிப்பு போன்ற விவகாரங்களில் பெரும் தலைகள் மாட்டும் போது அவருக்கு நெருக்கமாக இருந்த நபர்கள் இப்படி மர்மமாக மரிப்பது ஒன்றும் புதிது இல்லை. சிலருடைய மரணங்கள் துள்ளத்துடிக்க கொலகளாகவும் நடந்திருக்கின்றன. இவை பலகாலமாக நடந்து வரும் அவலம்தான் என்று தலையிலடித்துக் கொள்கிறார்கள் நடுநிலையான அரசியல் பார்வையாளர்கள்.
ஆம் அது உண்மைதான்! அப்படி தமிழகத்தை உலுக்கிய சில மர்ம மரிப்புகளை பார்ப்போமா?...
ஸ்டாலினுக்கு எதிராக ஜெ., அரசு கட்டி எழுப்பிய ‘மேம்பால ஊழல் வழக்கு’ விஸ்வரூபம் எடுத்தபோது ஸ்டாலினின் வலது கரமாக இருந்த அண்ணநகர் ரமேஷின் தலையும் சேர்த்து உருட்டப்பட்டது. இவரது உண்மையான பெயர் ரமேஷ் நாராயணன். ஒருகாலத்தில் அ.தி.மு.க. அமைச்சர் ஒருவருடன் ஒட்டும் உறவுமாக இருந்தவர் பின் ஸ்டாலினுக்கு எல்லாமுமாகவே ஆனார். ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய ஸ்டாலினுக்கு முதல்நாள் பிரச்சாரத்தின் போது ஜீப்பை இயக்கிய சாரதியே ரமேஷ்தான். அப்பேர்ப்பட்டவர் மேம்பால ஊழல் வழக்கு வைபரேஷன் மோடுக்கு போது தன் குடும்பத்துடன் மர்மமாக இறந்தார்.
இது நடந்தது 2001_ல். மாஸாக தற்கொலை செய்து கொள்ள ரமேஷின் குடும்பம் ஒன்றும் வாழ்ந்து முடித்தவர்களில்லை. 36 வயதான ரமேஷ் 30 வயதான மனைவியுடன், பத்து வயதுற்குட்பட்ட தன் மூன்று மகள்களுடன் வீட்டு படுக்கையறையில் இறந்து கிடந்தார். தற்கொலை செய்து கொண்டதாக அவரது அருகிலிருந்த கடிதம் சொல்லியது.
ஆனால் அதற்கான உண்மையான காரணங்கள் என்ன? தூண்டியது யார்? என்று தொக்கி நிற்கும் ஆயிரத்தெட்டு கேள்விகளுக்கு பதினாறு வருடங்களாகியும் இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்த குடும்பம் உயிரோடு இருந்திருந்தால் மூத்த பொண்ணுக்கு 26 வயசு முடிஞ்சிருக்கும் என்று அவர்களின் ரத்த உறவுகள் இன்றும் கொதிக்கிறார்கள். இந்த மாஸ் மர்ம மரணத்துக்கு காரணம் தி.மு.க.வா, அ.தி.மு.க.வா அல்லது இரண்டுமா? இவர்களில்லையென்றால் வேறு யார்தான்!
தங்கள் தலைவனுக்கு ஜூன் 3_ம் தேதி பல மாநில முதல்வர்கள் முன்னிலையில் வைரவிழா காணப்போகும் தி.மு.க. கடந்து வந்த பாதையில் சில சர்ச்சை கள்ளிச்செடிகளையும் தாண்டித்தான் வந்திருக்கிறது. சிவகங்கை மாவட்ட மாஜி செயலாளரும், மாஜி நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான தா.கிருட்டிணன் மதுரையில் நடைப்பயிற்சியின் போது வெட்டி சாய்க்கப்பட்ட குரூரம் மறக்க கூடியதா? அழகிரியை விடாது துரத்திய வழக்கல்லவா இது!
இதேபோல்தான் மாஜி அமைச்சர் ஆலடி அருணாவும் அவரது சொந்த ஊர்பக்கம் சாய்த்து சிதைக்கப்பட்டார். ஸ்பெக்ட்ரம் ராசாவின் நண்பர் சாதிக்பாஷாவின் மர்ம மரணத்துக்கு இன்றுவரை விடையில்லை. அழகிரி இருக்கும் தைரியத்தில் தி.மு.க.வின் இன்னொரு அதிகார மையத்தையே ஏளனமாக உரசி பார்த்தவர் பொட்டு சுரேஷ்.
சர்ச்சை மரணங்கள் அ.தி.மு.க.விலும் உண்டு. தேனி மாவட்ட பூசாரி ஒருவரின் தற்கொலை விவகாரத்தில் பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா கைது வரை சென்றாரே? அதேபோல் பல வருடங்களுக்கு முன் திருச்செந்தூர் ஆலயத்தில் முருகனின் விலை மதிப்பற்ற வேல் ஒன்று காணாமல் போன விவகாரத்தை தொடர்ந்து அதிகாரி ஒருவரின் மர்ம மரணம் நடந்தது. அதன் பின்னணியில் அமைச்சர் ஒருவரின் பெயர் போட்டு ஆட்டப்பட்டது.
இதை வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர். ஆட்சியின் விழியில் விரலை விட்டு ஆட்டியது தி.மு.க. அதேபோல் கடந்த ஜெ., ஆட்சியில் அரசு அதிகாரி முத்துக்குமாரசாமி மரண வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சிக்கி சின்னாபின்னமானது நினைவிருக்கலாம். பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே...என்று கலைஞரின் பாடலை தனக்காக ரீமேக்கே பண்ண வேண்டிய நிலைக்கு ஆளானார்.
இப்போது கூட கொடநாடு பங்களாவில் காவலாளி கொல்லப்பட்டதும், அதன் பின் நிகழ்ந்த இரண்டு விபத்துகளில் அந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய இரண்டு குற்றவாளிகளில் ஒருவரான கனகராஜ் இறந்ததும், இன்னொருவரான சயானின் இளம் மனைவி வினுபிரியாவும், குட்டி மகள் நீத்துவிம் சிதைந்து இறந்து, அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதும் தடதடவென நகர்ந்து கொண்டிருக்கும் அரசியல் பின்னணியுடைய க்ரைம் விஷயங்கள்.
தமிழக அரசியலின் இந்த தலைவாங்கும் புத்தி எப்போது மாறுமோ?