6வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டின் இளைஞர்கள் என்ன செய்வார்கள். 6 வது பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் அஞ்சல்துறையில் உள்ள 3,167 காலிப்பணியிடங்களில், தமிழ்நாட்டு இளைஞர்களை மட்டுமே நிரப்ப, அஞ்சல்துறை முன்வர வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்தியா முழுவதும் 40000 கிராமின் டாக் சேவக் காலியிடங்களுக்குப் பணியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசின் அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. இதில், தமிழ்நாட்டில் 3,167 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்கள், 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக, கடந்த ஜனவரி 27ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- காவல்துறையை வைத்து காரியத்தை சாதித்துவிடலாம் நினைக்காதீங்க! என்எல்சி நிர்வாகத்தை எச்சரிக்கும் வேல்முருகன்..!
இணைய விண்ணப்பத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பாட வாரியாக கேட்கப்பட்டு உள்ளது. மாநில பாட முறையில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களே உண்டு. ஆனால், இணைய விண்ணப்பத்தில் 6வது பாடமும் இடம் பெற்றுள்ளது. அது "தெரிவு மொழி" என்பது. மற்ற மாநிலங்களில் தெரிவு மொழி இருப்பதால், அம்மாநிலங்களில் அஞ்சல்துறை தேர்வுக்கு விண்ணப்பிக்க எந்த வித சிக்கலும் இல்லை. ஆனால், 6வது பாடமே இல்லாத, இரு மொழித் திட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டின் இளைஞர்கள் என்ன செய்வார்கள். 6 வது பாட விவரங்களை நிரப்பாவிட்டால் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முடியாது.
பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியாவில், தேர்வுகளை நடத்தும் போது, அம்மாநிலங்களில் உள்ள கல்விக்கொள்கையை, கணக்கில் கொள்ளப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. இது வன்மையாக கண்டிக்கதக்கது. குறிப்பாக, அஞ்சல்துறை இணையத்தில் வெளியிட்டுள்ள விண்ணப்பம், திட்டமிட்டு தமிழ்நாட்டு இளைஞர்களை புறக்கணிப்பதற்கான சதித்திட்டமோ என்ற சந்தேகமும், அச்சமும் இயல்பாகவே எழுகிறது. ஏனென்றால், கடந்த கால நிகழ்வுகளும், அனுபங்களும் நமக்கு பல்வேறு கற்பிதங்களை கற்றுக்கொடுத்துள்ளது.
இதையும் படிங்க;- தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் அரங்கேறும் தொடர் குற்றங்கள்.. தடுக்க இதை செய்யுங்கள்.. அலறும் வேல்முருகன்..!
அதாவது, தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான நெய்வேலி அனல் மின் நிலையம், ஆயுதத் தொழிற்சாலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, தொலைபேசித் துறை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி அலுவலகங்கள் உள்பட்ட அனைத்திலும் திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, 85 விழுக்காடு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்குச் சேர்க்கும் அவலம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதன் நீட்சியாக தான், தற்போது அஞ்சல்துறையின் அறிவிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு முதலியவை மண்ணின் மக்களாகியத் தமிழர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில்தான் மொழிவழி ஆட்சி மாநிலமாகத் தமிழ்நாடு 1956 நவம்பர் 1-இல் வடிவமைக்கப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இந்த நோக்கத்துக்கு எதிராக, இந்திய அரசு அனைத்திந்தியத் தேர்வு என்பதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுத் தொழிலகங்கள், அலுவலகங்கள் என அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே சேர்த்துவருகிறது. எனவே, இணைய விண்ணப்பத்தில் 6 வது பாட விவரம் கட்டாயமாகக் கேட்கப்படுவதை கைவிட வேண்டும். தமிழ்நாட்டு இளைஞர்கள் விண்ணப்பிக்கும் வகையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அஞ்சல்துறையில் உள்ள 3,167 காலிப்பணியிடங்களில், தமிழ்நாட்டு இளைஞர்களை மட்டுமே நிரப்ப, அஞ்சல்துறை முன்வர வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்நாட்டின் இளைஞர்களை ஒன்று திரட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன் என வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.