" வெங்கடாசலம் தற்கொலையில் திமுக வட மாவட்ட அமைச்சருக்கு தொடர்பு" .. ஸ்டாலினை உதறவிட்ட சி.வி சண்முகம்.

By Ezhilarasan BabuFirst Published Dec 17, 2021, 1:07 PM IST
Highlights

அவரது தற்கொலையில் வட  மாவட்டத்திலுள்ள அமைச்சருக்கு தொடர்பு இருக்கிறது. எனவே இதை சிபிஐ விசாரிக்க வேண்டும், அவரது செல்போனை ஆராய்ந்தால், அவரை யாரெல்லாம் மிரட்டினார்கள், யாரெல்லாம் அவருடன் பேசினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கும்

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலையில் திமுகவின் வடமாவட்ட அமைச்சருக்கு தொடர்பு இருக்கிறது என்றும், வெங்கடாசலத்தின் கைபேசியை ஆராய்ந்தால் அவரை மிரட்டியவர்கள் யார் என்பது தெரியும் என்றும் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக  வாக்குமூலம் அளிக்கும்படி அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு துறை மிரட்டுகிறது, அப்படி மிரட்டப்பட்ட நிலையில் தான் வெங்கடாசலம் தற்கொலை செய்துகொண்டிருக்ககூடும் என சந்தேகம் உள்ளதாக ஏற்கனவே  அவர் கூறியிருந்த நிலையில், தற்போது அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் வெங்கடாசலம், இவர் வேளச்சேரி புதிய தலைமைச் செயலக காலனியில் வசித்து வந்தார்.  வனத்துறை அதிகாரியாக இருந்த இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியில் இருந்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக  அவர் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது 10 லட்சம் ரூபாய் ரொக்கம், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தனக் கட்டைகள் கைப்பற்றப்பட்டது. அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து வந்த நிலையில், திடீரென தனது வேளச்சேரி இல்லத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு பின்னர் வெங்கடாசலத்துடன் அவரது மகன் மற்றும் மனைவிக்கு பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்ததாகவும், அதேபோல் அவர் சொந்த ஊருக்கு சென்றபோது அங்கு உறவினர்கள் ரெய்டு குறித்து கேட்டதால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரது தற்கொலைக்கு உண்மைக்காரணம் என்ன? அவரது அறையில் ஏதாவது கடிதம் உள்ளதா? அவரது செல்போனில்ஏதாவது  தகவல் இருக்கிறதா என போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது மரணத்துக்குப் பின்னர் அரசியல் ஒளிந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். வெங்கடாசலம்  விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி தற்கொலைக்கான உண்மை காரணத்தை வெளியில் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேசியவர் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் தமிழகம் ஒரு மர்மதேசம் போல விளங்கிக் கொண்டிருக்கிறது, உயர் மட்ட அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை அனைவரும் அச்ச உணர்வோடு பணியாற்றும் நிலை உள்ளது.

தமிழகத்தில் ஏதோ ஒரு நாடகத்தை திமுக நடத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆட்சிக்கு வந்தது முதல் எதிர்க்கட்சியினரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருகிறது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாசலத்தை ராஜினாமா செய்ய வேண்டுமென திமுக வற்புறுத்தியது, அவர் அதை மறுத்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு துறை சோதனை  நடத்தப்பட்டதாக அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரது மரணத்தில் மர்மம் உள்ளது, எனவே இதில் தமிழக காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே இதை சிபிஐ  விசாரித்து உண்மையை வெளியில் கொண்டு வரவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். மேலும், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு உயர் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை மிரட்டி வருகிறது. அடிபணியாத அதிகாரிகள்மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிந்து சோதனை நடத்தி வருகிறது. அதுபோன்று அச்சுறுத்தல் கொடுத்ததால்தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது என கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவை கண்டித்து அதிமுகவின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சிவி சண்முகம், மீண்டும் முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தற்கொலை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், வெங்கடாசலம் சிலரால் மிரட்டப்பட்டுள்ளார். அதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தற்கொலையில் வட  மாவட்டத்திலுள்ள அமைச்சருக்கு தொடர்பு இருக்கிறது. எனவே இதை சிபிஐ விசாரிக்க வேண்டும், அவரது செல்போனை ஆராய்ந்தால், அவரை யாரெல்லாம் மிரட்டினார்கள், யாரெல்லாம் அவருடன் பேசினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். முறையாக செல்போனை ஆராய்ந்தால் அதில் பலர் சிக்குவார்கள் என அவர் கூறியுள்ளார். முன்னால் அமைச்சர் சிவி சண்முகத்தின் இந்த பேச்சு திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
 

click me!