
டெல்லி: காங்கிரசில் நிலவும் உச்சக்கட்ட குழப்பங்களுக்கு தீர்வு காண வேண்டிய நிலை இருப்பதால் உடனடியாக காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கோஷ்டி பூசல்களுக்கு பஞ்சமில்லாத கட்சி என்றால் அது காங்கிரஸ் தான் என்று எளிதாக கையை காட்டி விடலாம். அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் பஞ்சாப்பை சொல்லி விடலாம்.
அப்படி, இப்படி என்று முதலமைச்சரை மாற்றினாலும் உட்கட்சி பூசல் இன்னமும் முடிந்தபாடில்லை. இதற்கு எல்லாம் தீர்வாக உடனடியாக கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டத்தை கூட்டுங்கள் என்று சீனியர் தலைவர்கள் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.
கட்சியின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் பஞ்சாப் பிரச்னையை பைசல் பண்ண காரிய கமிட்டியை கூட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டு இருக்கிறார்.
இதே கருத்தை தான் மற்றொரு முக்கிய தலைவரான கபில் சிபலும் தெரிவித்து உள்ளார். கட்சியின் இப்போது என்ன நடக்கிறது? யார் முடிவெடுக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என்றும் கூறி இருக்கும் அவர், கட்சிக்குள் இருக்கும் பிரச்னையை பேசினால் தான் தீர்வு காண முடியும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.