
குஜராத், இமாசலப் பிரதேச மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜக., வெற்றி வாகை சூடி வரும் நிலையில், காங்கிரஸ் அலுவலகங்கள் களை இழந்து காணப்படுகிறது.
குஜராத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்தது காங்கிரஸ் கட்சி. தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, குஜராத்தில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்வார் என்று அக்கட்சித் தலைவர்கள் நம்பினார்கள். ஆனால், முன்பைக் காட்டிலும் சில தொகுதிகள் கூடுதலாகப் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதே அன்றி, மாநிலத்தில் விட்ட இடத்தைப் பிடிக்க முடியவில்லை.
ஹிமாச்சலில் ஆட்சியை இழந்து தவிக்கிறது காங்கிரஸ். அது ஆளும் மாநிலங்களில் இப்போது மேலும் ஒன்று குறைந்து போயுள்ளது. குஜராத்தில் எதிர்பார்த்தபடி, வெற்றி இல்லை. படேல் சமூகத்தின் பிரதிநிதி என்று வர்ணிக்கபட்ட இளைஞர் ஹர்திக் பட்டேலும் கூடவே வந்து கைகோத்து பிரசாரங்கள் செய்தும் பலன் கிட்டவில்லை. குறிப்பாக படேல் சமூக பெரும்பான்மை மக்கள் இருக்கும் இடங்களிலும் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும்படி தேறவில்லை.
சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என தங்கள் மீது குத்தப்பட்ட முத்திரையைப் போக்க, குஜராத் மாநில கோயில்களில் ஏறி இறங்கினார் ராகுல் காந்தி. ஆனாலும் பலன் பெரிதாகக் கிடைக்கவில்லை. இதனால், ஆமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடிப் போயுள்ளது, கொண்டாட்டம் ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி!