எம்.பி. வசந்தகுமார் உடல் தாய் - தந்தை நினைவிடம் அருகே நல்லடக்கம்... ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 30, 2020, 12:27 PM IST
Highlights

அதன் பின்னர் அவருடைய வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட உடல், வசந்தகுமாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள அவருடைய அப்பா, அம்மாவின் நினைவிடம் அருகே புதைப்பட்டது

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவருடைய நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. வென்டிலேட்டர் மூலம் வசந்தகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் கவலைக்கிடமாகவே இருந்தது.

இந்நிலையில் 2வது முறையாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட வசந்தகுமார் உடல், சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவருடைய வீட்டில்  பொதுமக்கள் அஞ்சலிக்கு நேற்று வைக்கப்பட்டது. பிறகு அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம், குமரி அனந்தன் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

அதன் பின்னர் அவருடைய வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட உடல், வசந்தகுமாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள அவருடைய அப்பா, அம்மாவின் நினைவிடம் அருகே புதைப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். சந்தனபேழையில் கிடத்தப்பட்டு கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

click me!