மோடியைப் புகழ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ… கட்சியினர் அதிர்ச்சி !!

By Selvanayagam PFirst Published May 27, 2019, 9:11 AM IST
Highlights

சிறுபான்மையினர் நலன்களை பாதுகாப்பதில் மோடி சிறந்தவர் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பாராட்டி இருப்பது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக உள்ள ரோஷன்பெய்க், அண்மைக் காலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். பெங்களூரு, சிவாஜிநகர் சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் ரோஷன் பெய்க், கடந்த 5 ஆண்டுகாலமாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துவந்தார். 

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மத்திய பெங்களூரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புக் கேட்டிருந்தார். இதன்மூலம் சிவாஜிநகர் சட்டப்பேரவை தொகுதியில் தனது மகன் ரூமன் பெய்கை காங்கிரஸ் வேட்பாளராகவும் முனைப்பில் இருந்தார்.
  
ஆனால் காங்கிரஸ் கட்சியில் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் அவர் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ரிஸ்வான் அர்ஷத்துக்கு ஆதரவான பிரசாரங்களில் கலந்து கொள்ளவில்லை. 

மே 23-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாக வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று தெரியவந்ததும், காங்கிரஸ் கட்சியை ரோஷன் பெய்க் வெளிப்படையாக சரமாரியாக விமர்சித்தார்.

இந் நிலையில், நேற்று பத்திரிக்கை ஒன்றில் அவர் வெளியிட்ட கட்டுரையில் , மோடி   பிரதமராக மீண்டும் பதவியேற்பதற்கு முன்பாகவே சமூக ஒற்றுமை குறித்து சிந்தித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  

ஒரே இந்தியா என்ற கருத்தை பலப்படுத்தவும்,  கடந்த பல ஆண்டுகளாக அச்ச உணர்வை விதைத்திருப்பதை விலக்கவும் எடுத்துள்ள முதல்படியாகவே இதைக் கருதுகிறேன். 


பிரதமர் மோடி, சொன்னபடி நடந்து கொள்வார் என்று நம்புவதோடு, ஒருங்கிணைந்த இந்தியாவை மேம்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன் என பாராட்டியிருந்தார்.

இது அம்மாநில காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்னகவே 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த  நிலையில், தற்போது மேலும் ஒரு எம்எல்ஏ பிரதமருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!