சித்தராமையா சொல்லித்தான் நாங்க ராஜினாமா செஞ்சோம்… அந்தர் பல்டி அடித்த அதிருப்தி எம்எல்ஏ !!

By Selvanayagam PFirst Published Jul 26, 2019, 7:53 AM IST
Highlights

கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் பாஜகவுக்கு  தொடர்பு இல்லை என்றும், சித்தராமையாவின் பேச்சை கேட்டுத்தான்  செயல்பட்டோம் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.வான சிவராம் ஹெப்பார்  அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் கூட்டணி அரசு கவிழ்ந்துள்ளது. இந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் தங்கி இருந்த காங்கிரஸ் கட்சியின் எல்லாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான சிவராம் ஹெப்பார் எல்லாப்பூருக்கு திரும்பினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூட்டணி அரசின் மீதான அதிருப்தியால் எம்.எல்.ஏ. பதவியை 15 பேரும் ராஜினாமா செய்தோம். ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறோம். 

ராஜினாமாவை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. எம்.எல்.ஏ. பதவியை உமேஷ் ஜாதவ் ராஜினாமா செய்திருந்த போது, அதனை சபாநாயகர் ரமேஷ்குமார் அங்கீகரித்து இருந்தார். அதுபோல, எங்களது ராஜினாமாவையும் அங்கீகரிப்பார் என்று நம்பிக்கை உள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.

தகுதி நீக்கம் செய்வதாக கட்சி தலைவர்கள் மிரட்டுவதை கண்டு பயப்பட போவதில்லை. போரில் கலந்து கொண்ட பின்பு எல்லாவற்றையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் தெரிந்து தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கிறோம். ராஜினாமா செய்துவிட்டு மும்பைக்கு சென்று தங்கினோம். அங்கு நாங்கள் பாஜகவினருடன் தொடர்பில் இருக்கவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு தோல்வி அடைந்து பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கும், அரசு அமைக்க பாஜக  முயற்சிப்பதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

நாங்கள் 15 பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பாஜகவில்  நாங்கள் சேரப்போவதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. ராஜினாமா அங்கீகரிக்கப்பட்ட பின்பு அனைவரும் கலந்து பேசி அடுத்தக்கட்ட முடிவு எடுப்போம்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். சித்தராமையா தான் எங்கள் தலைவர். ராஜினாமா விவகாரத்தில் சித்தராமையாவின் பேச்சை கேட்டு செயல்பட்டோம். அதற்கும் பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என்று அதிரடியாக தெரிவித்தார்..

click me!