தேசப் பக்தர்களின் சங்கமம் காங்கிரஸ்.. தேச விரோதிகளின் கூடாரம் பாஜக.. எல்.முருகனை தெறிக்கவிட்ட கே.எஸ்.அழகிரி..!

By Asianet TamilFirst Published Feb 15, 2021, 10:31 PM IST
Highlights

இந்தியாவின் விடுதலைக்கு பங்களிக்காமல் தேசத் துரோகிகளின் கூடாரமாக உள்ள பாஜக, தேசபக்தர்களின் சங்கமமாக உள்ள காங்கிரசை விமர்சனம் செய்ய தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு என்ன தகுதியிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

சென்னையில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மூன்றாம் கட்டமாக பிப்ரவரி 27, 28, மார்ச் 1 ஆகிய மூன்று தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்போது விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர், மீனவர்கள், மாணவர்கள் என பல தரப்பினரை ராகுல் சந்திக்க உள்ளார்.  பிரதமர் மோடி சென்னை வந்தபோது மக்கள் பார்வையில் படாமல் பாதுகாப்பான வாகனத்தில் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ராகுல்காந்தியைப் போல மக்களை சந்திக்காமல் பிரதமரின் பயணம் அமைந்தது.
மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் பிப்ரவரி 4-ஆம் தேதி ரூ. 25 உயர்த்தப்பட்டது. தற்போது ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சிலிண்டரின் விலை ரூ.785 ஆகியுள்ளது. கடந்த 8 மாதங்களில் ரூ. 220 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் லட்சக்கணக்கான குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும். 2014 மே மாதத்தில் சிலிண்டர் விலை ரூ.412. கடந்த 7 ஆண்டுகளில் சிலிண்டர் விலை பாஜக ஆட்சியில் ரூ.373 உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து மார்ச் மாதத்தில் பாஜக அரசை எதிர்த்து தமிழக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும்.
மெட்ரோ ரயிலை எதிர்த்து மோனோ ரயில் திட்டத்தை ஜெயலலிதா ஆதரித்தார். அதற்காக அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கி வைத்தவர் ஜெயலலிதா. ஆனால், தடைகளை மீறி சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரை கம்பீரமாக 10 கி.மீ. தூரம் மேம்பாலம் மூலம் மெட்ரோ ரயில் செல்வதை பார்த்து வியப்படையாதவர்கள் யாரும் இல்லை. இதற்கு காரணம் மன்மோகன்சிங் ஆட்சிதான். தமிழக பாஜக தலைவர் முருகன், எதிர்காலமே இல்லாத பாஜகவுக்கு சப்பை கட்டு கட்டி வரம்புகளை மீறி பேசுகிறார்.


வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தேசபக்தர்களுக்கும், தேசவிரோத சக்திகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்று கூறியுள்ளார். யார் தேசபக்தர்கள்? யார் தேச விரோதிகள்? இந்தியாவின் விடுதலைக்கு பங்களிக்காமல் தேசத் துரோகிகளின் கூடாரமாக உள்ள பாஜக, தேசபக்தர்களின் சங்கமமாக உள்ள காங்கிரசை விமர்சனம் செய்ய முருகனுக்கு என்ன தகுதியிருக்கிறது?” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
 

click me!