
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்வதாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதால், அந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
குஜராத்தில் உள்ள மொத்தம் 182 தொகுதிகளில், ஆட்சி அமைக்க தேவையானது 92 தொகுதிகள். பாஜக 99 தொகுதிகளிலும் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், இமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 44 தொகுதிகளைக் பாஜக கைப்பற்றியுள்ளது.
இதன்மூலம் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.
ஆனால், கடந்த 2012ம் ஆண்டைவிட காங்கிரஸ் கட்சி இம்முறை 19 தொகுதிகளை அதிகமாக கைப்பற்றியுள்ளது. அத்துடன் வாக்கு சதவிகிதமும் கணிசமாக அதிகரித்துள்ளது. குஜராத்தில் வளர்ச்சியை சந்தித்துள்ள காங்கிரஸ், தான் ஆட்சி செய்த இமாச்சலப் பிரதேசத்தை கோட்டைவிட்டது.
இந்நிலையில், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்வதாகவும் இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கப்போகும் பாஜகவிற்கு வாழ்த்துகளையும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.