சிக்கலில் தேமுதிக…. யாருடன் கூட்டணி என முடிவெடுக்க முடியாமல் திணறல் !!

By Selvanayagam PFirst Published Feb 10, 2019, 8:39 AM IST
Highlights

கூட்டணி தொடர்பாக அதிமுக, அமமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடம் தேமுதிக வைத்த கோரிக்கைகளை  அவை ஏற்க மறுத்துவிட்டதால் கூட்டணி குறித்த முடிவு எடுக்க முடியாமல் அந்தக்கட்சி திணறி வருகிறது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சு வார்த்தை என அனைத்து கட்சிகளும் பிஸியாக உள்ளன.

இந்த நேரத்தில் தேமுதிக  தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தன் மனைவி பிரேமலதா, இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோருடன், அமெரிக்காவில் சிசிச்சை பெற்று வருகிறார். ஆனால் தேர்தல் நெருங்கி வருவதால்  கூட்டணி பரபரப்புகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

தேமுதிக சார்பில், கூட்டணி பேச்சு நடத்துவதற்கு, விஜயகாந்த் மைத்துனர், சுதீஷ் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவில் உள்ளவர்களை தவிர்த்து, சுதீஷ் மட்டும், இரவு நேரங்களில், கூட்டணி பேச்சில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவுடன் நடந்த பேச்சில், தேமுதிக  தரப்பில், ஐந்து தொகுதிகளும், தேர்தல் நிதியும் கேட்கப்பட்டு உள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தலில், 30 சதவீத இடங்களும் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால், அ.தி.மு.க., தரப்பில், இரண்டு, 'சீட்' ஒதுக்குவதாகவும், உள்ளாட்சி தேர்தல் நேரத்தில், அது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதனால், கூட்டணி முடிவாவதில் இழுபறி நீடித்து வருகிறது.

அதேபோல அமமுகவுடன் நடத்தி வரும் பேச்சு வார்த்தையிலும்  இழுபறி நீடிக்கிறது. கூட்டணிக்கு, விஜயகாந்த் தலைமை ஏற்க வேண்டும்; விஜயகாந்த் சொல்லும் பெயரையே, கூட்டணிக்கு வைக்க வேண்டும்; தேர்தல் செலவிற்கு கணிசமான நிதி வழங்க வேண்டும்' என, அடுக்கடுக்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால், இந்த கூட்டணியும், இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பாஜக தலைமையில், மீண்டும், மூன்றாவது அணி உருவாகும்பட்சத்தில், அதில் இடம் பெறவும், தே.மு.தி.க., பேச்சு நடத்துகிறது. கடந்த, 2014 நாடாளுமன்றத்  தேர்தலில் வழங்கியது போன்று, 14 தொகுதிகளை வழங்க வேண்டும்; பா.ஜ., வேட்பாளருக்கு செலவிடும் தொகையை, தேமுதிகவினருக்கும் செலவிட வேண்டும்' என, நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

ஆனால் அதிமுகவுடன்  கூட்டணியை இறுதி செய்யவுள்ளதால், பாஜக தலைமை, தேமுதிகவின் கோரிக்கையை ஏற்கவில்லை என, தெரிகிறது. அதேநேரத்தில், கூட்டணி பேச்சையும் முறிக்கவில்லை. இரண்டு தரப்பிலும், ரகசிய பேச்சு தொடர்கிறது.தேமுதிக  வைக்கும் கோரிக்கைகள், மூன்று கட்சிகள் தரப்பிலும் நிராகரிக்கப்படுவதால், கூட்டணியை இறுதி செய்ய முடியாமல், அக்கட்சி தலைமை திணறி வருகிறது. 

இந்நிலையில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து, மார்ச் மாதம், சென்னை திரும்புவார் எனவும், அப்போது, கூட்டணி முடிவை, அவர் வெளியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது.

click me!