ஏக்கருக்கு 40 ஆயிரம் நஷ்ட ஈடு கொடு.. பொங்கல் அதுவும் விவசாயிகள் ரத்த கண்ணீர். எடப்பாடியாருக்கு வைகோ நெருக்கடி.

By Ezhilarasan BabuFirst Published Jan 16, 2021, 11:26 AM IST
Highlights

இதனால் விவசாயிகள் பொங்கல் பண்டிகையைக்கூட கொண்டாட முடியாமல் மன உளைச்சலுக்கும், துயரத்திற்கும் ஆளாகி தவிக்கின்றார்கள். இந்த நிலையில், சேதம் அடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்கும் பணியில் உடனடியாக தமிழக அரசோ, அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்கு உரியதாகும்.

மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளச் சேதம் ஏற்பட்டு, விவசாய மக்களுக்கு பெரும் துயர் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தின் பாபநாசம், மணிமுத்தாறு, தாமிரபரணி நதிகளில் பெருக்கெடுத்து ஓடி வரும் வெள்ளத்தாலும், தொடர் அடை மழையாலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் சீரழிவு ஏற்பட்டுள்ளது. 

வீடுகளும் வெள்ள நீரால் மூழ்கடிக்கப்பட்டு உள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கிவிட்டன. இலட்சக்கணக்கான ஏக்கர் நெல், கரும்பு, வாழை, மணிலா, மக்காசோளம், சூரியகாந்தி, உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்கள் நாசமாகி உள்ளதைக் கண்டு வேளாண் குடிமக்கள் இரத்தக் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதனால் விவசாயிகள் பொங்கல் பண்டிகையைக்கூட கொண்டாட முடியாமல் மன உளைச்சலுக்கும், துயரத்திற்கும் ஆளாகி தவிக்கின்றார்கள். இந்த நிலையில், சேதம் அடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு, கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்கும் பணியில் உடனடியாக தமிழக அரசோ, அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்கு உரியதாகும். தூத்துக்குடியில் மாவட்டத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்று நான்கு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்கள். 

அவர்களைப் போலவே டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளும் போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள். எனவே தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வருவாய் குறுவட்ட வாரியாக கணக்கிடாமல், வருவாய் கிராம வாரியாக வருவாய் இழப்பைக் கணக்கிட்டு, ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நட்ட ஈடு வழங்கிட வேண்டும். இயற்கை இடர்பாடுகளால் அடுத்தடுத்து இழப்புகளைச் சந்தித்து பெரும் துயரில் வாடிக்கொண்டு இருக்கும் விவசாயிகளின் விவசாயக் கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறி அதில் கூறப்பட்டுள்ளது.  

click me!