கொரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது இருந்தால் பொதுமக்கள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கும் முதல்வர் பழனிசாமி கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பவர்கள் அரசுக்கு தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
உலகையே உலுக்கி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியிருக்கிறது. இதுவரையில் 415 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர். தமிழகத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க அரசு ஆலோசித்து வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு ஏற்கனவே 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நிலையில் தற்போது கூடுதலாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அவர் கூறும்போது, 100 ஆண்டுகளில் சந்தித்திராத சவால்களை நாம் சந்தித்துக் கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியிருக்கிறார்.
கொரோனா தொற்று அறிகுறியுடன் யாராவது இருந்தால் பொதுமக்கள் அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கும் முதல்வர் பழனிசாமி கொரோனா தொற்றுக்கான அறிகுறியுடன் இருப்பவர்கள் அரசுக்கு தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தமிழக மக்கள் அளிக்கும் ஆதரவிற்கு நன்றி எனவும் பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று மக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.