#BREAKING கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 29, 2021, 1:30 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, 18 வயது நிறைவடையும்போது ரூ. 5 லட்சம் வட்டியுடன் தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில்  தீயாய் பரவி வந்த கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்றால் முன் களப்பணியாளர்கள் உட்பட சாமானியர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த முன் களப்பணியாளர்களும், முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கும் தமிழக அரசு பல்வேறு நிவாரணங்களை அறிவித்து வருகிறது. 

அந்தவகையில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வந்தன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் வைக்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும் போது அந்த தொகை வட்டியோடு சேர்த்து அவர்களுக்கு வழங்கப்படும். பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் தங்க வைக்க முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், கொரனோ தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் நிவாரண உதவிகள் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். பட்டப்படிப்பு வரை கல்வி மற்றும் விடுதிக்கான செலவையும் அரசே ஏற்கும் என்றும், உறவினர்களுடன் வசித்து வரும் குழந்தைகளுக்கு அவர்கள் 18 வயது அடையும் வரை மாதம்தோறும் ரூ.3,000 வழங்கப்படும் என்றும் அரசு விடுதி, இல்லங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்களில் இந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!