கொரோனாவை விட திமுகவை கண்டுதான் முதல்வர் அஞ்சு நடுங்குகிறார்... போட்டு தாக்கிய மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Oct 2, 2020, 2:53 PM IST
Highlights

கொரோனா காலத்தில் அ.தி.மு.க. செயற்குழு நடக்கிறது. அமைச்சர்கள் தினமும் பேட்டி கொடுக்கிறார்கள். முதலமைச்சர் ஊர் ஊராக ‘டூர்’ போகிறார். ஆனால் கிராம சபை மட்டும் கூடக் கூடாது. அதாவது தி.மு.க. எதையும் செய்யக்கூடாது. இது ஒன்றுதான் உங்கள் நோக்கமா? ஊரடங்கை நீட்டிப்பதே தி.மு.க.வுக்காகத் தானா? மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

அதிமுக செயற்குழு கூட்டத்தைக் கூட்டியபோது பரவாத கொரோனா, கிராம சபைக் கூட்டத்தால் பரவுமா என  மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்;- பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராகக் கிராம சபையைக் கூட்டி தீர்மானம் போடுங்கள்”என்று நான் அறிவிப்புச் செய்தேன். வேளாண் சட்டத்தை எதிர்க்காமல் துணை நிற்கும் ஆட்சியாக அ.தி.மு.க. ஆட்சி இருந்து வருகிறது. அதை எதிர்த்து நாம் குரல் கொடுத்து வருகிறோம். இரண்டு நாட்களுக்கு முன்னால் தமிழ்நாடு முழுக்க நாம் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இன்று ஊராட்சி முழுக்க கிராமசபைக் கூட்டத்தை நடத்துகிறோம். எங்கள் ஊர் சார்பாக வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கிராமசபைக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்த நேரத்தில் அரசியல் பேசக் கூடாது, கட்சித் தீர்மானம் - கண்டனத் தீர்மானம் - அரசுக்கு எதிராகத் தீர்மானம் போடக்கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சொல்லி வந்தார்கள். நேற்றிரவு 10 மணிக்கு திடீரென்று கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தகவல் வந்தது. அதற்குக் காரணம் கொரோனா என்று காரணத்தைச் சொல்கிறார்கள். கொரோனாவிற்கு பயப்படுவதை விட தி.மு.க. -வைப் பார்த்துத் தான் எடப்பாடி பயந்து கொண்டிருக்கிறார். மக்களுக்காகத் தான் போராடுகிறோம். சொந்தப் பிரச்சினைகளுக்காக இல்லை.

இது கிராமசபை கிடையாது; ‘மக்கள் சபை’. உள்ளாட்சித் தேர்தலில் எப்போதும் ஆளும் கட்சிதான் அதிகமாக வெற்றி பெறும். தேர்தல் நேரத்தில் எவ்வளவோ அநியாயங்கள் - அக்கிரமங்கள் செய்தார்கள். அதையும் மீறி எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க தான் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க.வைச் சார்ந்த தலைவர்கள் மட்டுமல்ல; இது விவசாயிகளுக்குக் குரல் கொடுக்கும் பிரச்சினை என்பதால் அ.தி.மு.க.வைச் சார்ந்த தலைவர்களும் இந்த தீர்மானங்களைப் போடத் தயாராகிவிட்டார்கள். இந்தச் செய்தி முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு சென்றுவிட்டதால் இந்த கிராமசபைக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கொரோனா காலத்தில் அ.தி.மு.க. செயற்குழு நடக்கிறது. அமைச்சர்கள் தினமும் பேட்டி கொடுக்கிறார்கள். முதலமைச்சர் ஊர் ஊராக ‘டூர்’ போகிறார். ஆனால் கிராம சபை மட்டும் கூடக் கூடாது. அதாவது தி.மு.க. எதையும் செய்யக்கூடாது. இது ஒன்றுதான் உங்கள் நோக்கமா? ஊரடங்கை நீட்டிப்பதே தி.மு.க.வுக்காகத் தானா?
மூன்று வேளாண் சட்டங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு என்ன கெடுதல்கள் - பிரச்சினைகள் - விவசாயிகள் எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில பேருக்குப் புரியவில்லை. அதை உங்களிடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

இந்தச் சட்டங்கள் -

* விவசாயத்தில் ஆன்லைன் வர்த்தகத்தைத் திணிக்கிறது.

* பண்ணை ஒப்பந்த விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமையாக்குகிறது.

* நெல்லுக்கான குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் கிடையாது.

* அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் அபாயம் இருக்கிறது.

* வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்கள் மூடப்படும்.

* உழவர் சந்தைகள் காணாமல் போகும்.

* சில்லறை வணிகம் - வியாபாரிகள் பெருமளவிற்குப் பாதிக்கப்படுவார்கள்.

* பொதுவிநியோகத் திட்டத்துக்கு அச்சுறுத்தல்.

* ரேசன் கடைகள் இருக்குமா என்றே தெரியவில்லை.

* விலைவாசி கடுமையாக உயரும்.

இப்படிப்பட்ட நிலைமைகள் விவசாயிகளுக்கு வந்துவிடும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  மேலும், கிராமப்புறங்களின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண் துறையைக் காப்பாற்ற இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒருமனதாக இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்பவர்கள் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் உங்கள் கைகளை உயர்த்தி ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 

click me!