Lockdown : மீண்டும் ஊரடங்கா..? கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை...

By Ganesh RamachandranFirst Published Nov 29, 2021, 10:31 AM IST
Highlights

ஓமிக்ரான் வைரஸ் மூன்றாவது அலையின் தொடக்கமா? என்று விவாதிக்கப்படும் வேளையில், தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, அனைத்து மாவட்ட கலெக்டர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உறுமாறிய புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஓமிக்ரான் வகை வைரஸ் 32 விதங்களில் உருமாற்றம் அடையக்கூடியது என்பதாலும், கோவிட் தடுப்பூசி மருந்து தயாரிப்பாளர்கள் தங்கள் மருந்துகள் ஓமிக்ரானுக்கு எதிராக செயல்படுமா என்பது தெரியவில்லை என்று கூறியிருப்பதாலும் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பரவிய டெல்டா வகை வைரஸை விட ஓமிக்ரான் தீவிரமாக பரவக்கூடியது என்பதால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்நிலையில் தான் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். புதிய வகை வைரஸ் பரவலை தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்று விவாதிக்க உள்ளார். தமிழகத்தில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தற்போது நீடித்து வருகிறது. இந்த ஊரடங்கு முடிந்து மறு உத்தரவு வரும் போது அதில் ஊரடங்கு பற்றிய கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கலாமா என்றும் ஆலோசிக்க உள்ளனர். இதற்கான அனைத்து மாவட்ட கலெக்டர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் இறையன்பு. இன்று மதியம் 12.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது.

ஏற்கனவே இரண்டு கடுமையான லாக்டவுன்களை தமிழகம் பார்த்துவிட்டது. மூன்றாவது லாக்டவுன் உடனடியாக வராது என்றாலும், கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும் முடிவுகள் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்படலாம் என்கிறார்கள். தமிழகத்தில் முகக்கவசம் அணிவீர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது என்று சுகாதரத்துறை செயலாளர் இரு தினங்களுக்கு முன் கூறியிருந்தார். எனவே முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடுமையாக கண்காணிக்க உத்தரவிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

click me!