கண்டும் காணாமல் இருக்கும் முதல்வர் பழனிசாமி..? முதல்வராக இருக்க தகுதியில்லை.. கிளம்பியது புது சர்ச்சை.. வலுக்கும் எதிர்ப்பு

First Published Feb 23, 2018, 12:34 PM IST
Highlights
chief minister palanisamy would not worry about people said mla prabhu


முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக இருந்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பிரபு, இன்று தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். 

ஏற்கனவே தினகரனுக்கு 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக உள்ளனர். அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விரைவில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அந்த தீர்ப்பு எம்.எல்.ஏக்களுக்கு சாதகமாக வரும் எனவும் அதன்பிறகு ஆட்சி கவிழ்க்கப்படும் எனவும் தினகரனும் அவரது ஆதரவாளர்களும் நம்பிக்கை தெரிவித்துவந்தனர்.

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தனது ஆதரவு ஸ்லீப்பர் செல்கள் வெளிவந்து ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் எனவும் தினகரன் கூறிவருகிறார். இந்நிலையில், எம்.எல்.ஏ பிரபு தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பிரபு பேசிய கருத்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மக்கள் ஆதரவு அதிகமாக உள்ள தினகரன் தலைமையின் கீழ் செயல்பட விரும்பி அவருக்கு ஆதரவளித்ததாக பிரபு கூறினார்.

மேலும், மக்கள் பணி செய்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் என்னால் மக்கள் பணிகளை சிறப்பாகவும் சுதந்திரமாகவும் செய்ய முடியவில்லை. கட்சியின் நிர்வாகிகளே எனக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். மக்களுக்கு நிறைய செய்யவேண்டும் என நினைத்தாலும் என்னால் செய்யமுடியவில்லை. இதை முதல்வர் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றுள்ளேன். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் முதல்வர் எடுக்கவில்லை. 

எனவே மக்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டுமென்றால், தினகரன் தலைமையின் கீழ் தான் செயல்பட வேண்டும். என்னை போன்றே நிறைய எம்.எல்.ஏக்கள் மக்கள் பணிகளை செவ்வனே செய்ய முடியாமல் கண்டிப்பாக தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தினகரனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஜெயலலிதா வழங்கியது போன்ற ஆட்சி அமையும். எம்.எல்.ஏக்களும் மக்கள் பணிகளை செய்ய முடியும் என பிரபு தெரிவித்துள்ளார்.

மக்கள் பணிகளை செய்வதற்கு கட்சி நிர்வாகிகளே தடையாக இருப்பதாகவும், அது தெரிந்தும் முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ பிரபு தெரிவித்திருக்கிறார். எனவே தினகரன் தலைமையில் செயல்பட எம்.எல்.ஏக்கள் முன்வர வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். இதன்மூலம் முதல்வராக இருக்க பழனிசாமி தகுதியற்றவர் என்ற கருத்தை மறைமுகமாக கூறியிருக்கிறார்.

மக்கள் பணியாற்ற ஆளுங்கட்சி நிர்வாகிகளே தடையாக இருப்பதாக பிரபு கூறியிருப்பது அரசின் மீது மக்கள் மத்தியில்  பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த அரசின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், எம்.எல்.ஏவின் இந்த குற்றச்சாட்டு ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தியையும் எதிர்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.
 

click me!