போக்குவரத்து துறையை சீரழித்த திமுக!! இழப்பை லிஸ்ட் போட்ட எடப்பாடியார்

First Published Jan 29, 2018, 12:20 PM IST
Highlights
chief minister palanisamy blame dmk for transport department loss


பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான காரணத்தை விளக்கிய முதல்வர் பழனிசாமி, போக்குவரத்து துறையில் திமுக விட்டு சென்ற கடன் தொகையை லிஸ்ட் போட்டு வாசித்து காட்டினார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, உதிரி பாகங்களின் விலை உயர்வு ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த 19ம் தேதி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டு, 20ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சுமார் 50 முதல் 100% வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால், ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பேருந்து கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் சிறிய அளவில் குறைக்கப்பட்டது. முடிந்த அளவிற்கு குறைக்கப்பட்டுவிட்டதாகவும் இதைவிட மேலும் குறைக்க முடியாது எனவும் அரசு தெரிவித்தது.

ஆனால், உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் சிறிய அளவிலேயே குறைக்கப்பட்டதாகவும், இது வெறும் கண் துடைப்பு எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இன்று, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், சென்னையில் இன்று அதிமுக உறுப்பினர் சேர்க்கையை முதல்வர் பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தொடங்கிவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து திமுக போராட்டம் நடத்துவது மக்கள் நலன் கருதி அல்ல; இது ஒரு அரசியல் ரீதியான போராட்டமே. 2011ல் அதிமுக ஆட்சி அமைந்தபோது, போக்குவரத்து துறை கடும் நஷ்டத்திலும் கடனிலும் இருந்தது. அதற்கு முந்தைய திமுக அரசின் செயல்பாடுகள்தான் காரணம்.

2011ம் ஆண்டில் அதிமுக ஆட்சி அமைந்தபோது, போக்குவரத்துத்துறைக்கு 3392.15 கோடி ரூபாய் கடன் இருந்தது. ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய நிலுவைத்தொகை 922.24 கோடி ரூபாயாக இருந்தது. பணியில் இருக்கும் ஊழியர்களுக்கான நிலுவைத்தொகை 1528.05 கோடி. 8500 பேருந்துகளின் ஆயுட்காலம் முடிந்தநிலையில், அவற்றை திமுக ஆட்சியில் அப்படியே இயக்கிக்கொண்டிருந்தனர்.

போக்குவரத்து துறைக்கு சொந்தமான 112 சொத்துகளை திமுக ஆட்சியில் அடமானம் வைத்திருந்தனர். இவ்வளவு நிதி நெருக்கடியையும் சவால்களையும் தாங்கிக்கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகம் செய்துகொண்டிருந்தோம்.

திமுக ஆட்சியில் இருந்ததை விட தற்போது, டீசலின் விலை, உதிரி பாகங்களின் விலை, ஊழியர்களின் ஊதியம், புதிய பேருந்துகளின் விலை என அனைத்துமே 30 முதல் 40% வரை உயர்ந்துள்ளது. எனவே பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகம் செய்ய முடியாது என்ற சூழலில் தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. 

இந்த சூழலை நன்கு அறிந்த திமுக, வேண்டுமென்றே அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்துகிறது என முதல்வர் பழனிசாமி விளக்கமளித்தார்.
 

click me!