
கவர்னர் கிரண்பேடி செல்லும் இடங்களில் யாரும் இடையூறு செய்ய வேண்டாம் என முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே எதிர்ப்பு வலுத்து கொண்டே போகிறது.
இதனால் புதுச்சேரியில் ஆட்சிக்கு முட்டுக் கட்டை போடும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திட்ட பணிகளை ஆய்வு செய்ய வரும் போது தொகுதி எம்எல்ஏக்கள் அவரை அனுமதிக்க கூடாது என கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் நாராயணசாமி சட்ட சபையில் அறிவித்தார்.
அதன்படி துப்புரவு பணிகளையும், திட்டப்பணிகளையும் ஆய்வு செய்ய வரும் கிரண்பேடிக்கு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து இடையூறு கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கவர்னர் கிரண்பேடி செல்லும் இடங்களில் யாரும் இடையூறு செய்ய வேண்டாம் என முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவையை பொறுத்தவரை மக்கள் அமைதியை விரும்புகிறவர்கள் எனவும், கண்ணியத்தை கடைபிடிப்பவர்கள் எனவும் தெரிவித்தார்.
மாநில நிர்வாகி என்ற முறையில் கவர்னருக்கு புதுவையில் பல பகுதிகளுக்கு செல்ல உரிமை உண்டு எனவும், நிர்வாக ரீதியாக மாநில அரசின் உரிமைகளில் கை வைத்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
மேலும், மாநில நிர்வாகி ஒரு பகுதிக்கு செல்லும் போது மறுப்பு தெரிவிப்பது பாரம்பரியத்துக்கு ஏற்புடையது அல்ல எனவும், ஆகவே, நான் பொதுமக்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் வேண்டி விரும்பி கேட்டு கொள்வது என்ன வென்றால் யாரும் கவர்னர் செல்லும் போது அவருக்கு தடை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கூறினார்.