
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி இந்த மாத இறுதி வரைதான் நீடிக்கும் எனவும், சிவாஜியை விட பெரிய நடிகர் பன்னீர்செல்வம் தான் எனவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆட்சியை எப்படியாவது தக்க வைத்து கொள்ள வேண்டும் என எடப்பாடியும் கட்சியை கைப்பற்ற பன்னீர் மற்றும் டிடிவி தினகரனும், ஆட்சியை கலைக்க வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் முரண்டு பிடித்து வருகின்றனர்.
ஆனால் தற்போதைக்கு எடப்பாடி ஆசை மட்டுமே நிறைவேறி வருவதாக தெரிகிறது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.
அப்போது, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஸ்டாலினுக்கு முன்பே ஓபிஎஸ்தான் பிரச்சனை எழுப்பினார் எனவும், ஆனால், தற்போது அவர் சிவாஜியை விட பெரிய நடிகராக இருக்கிறார் என்பது தெரிய வருகிறது எனவும் தெரிவித்தார்.
மேலும், கருணாநிதி நன்றாக இருந்திருந்தால் இந்நேரம் இந்த ஆட்சியை கலைத்திருப்பார் எனவும், அவரின் அரசியல் அறிவும், அனுபவமும் அத்தகையது எனவும் குறிப்பிட்டார்.
ஆனால், அடுத்த முதலமைச்சர் என திமுக கட்சியினரால் அழைக்கப்படும் ஸ்டாலின், எடப்பாடி அரசை கவிழ்ப்பதில் தோல்வி அடைந்து வருவதாகவும், தனக்கு கிடைத்துள்ள தகவல் படி, இந்த மாத இறுதிக்குள் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து விடும் எனவும் விஜயகாந்த் தெரிவித்தார்.