
மலையேற்ற பயிற்சி பெறுபவர்கள் அரசின் உரிய அனுமதி பெற்ற பிறகே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்களாகவே மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டதால்தான் இந்த நிலை ஏற்பட்டதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்து 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் இன்று திங்கள்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மலை ஏறி திரும்பும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தனிதனியாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ட்ரெக்கிங் சென்ற சென்னையைச் சேர்ந்த 6 பேரும், ஈரோட்டைச் சேர்ந்த 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். தீயில் இருந்து தப்பிக்க உயிரிழந்த 9 பேரும் அங்கிருந்த மிகப்
பெரிய குழியில் குதித்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காட்டு தீயில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மலையேற்றத்துக்கு சென்ற தங்களின் பிள்ளைகள் பத்திரமாக வீடு திரும்ப பெற்றேர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
காட்டு தீ விபத்து குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலையேற்ற பயிற்சி பெறுபவர்கள் உரிய அனுமதி பெற்ற பிறகே செல்ல வேண்டும். உரிய அனுமதி பெற்றிருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்திருக்க முடியும்.
ஆனால், எந்த முன்னறிவிப்பும் இன்றி, அவர்களாகவே மலையேறியதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலை இனி வரும் காலங்களில் ஏற்படக் கூடாது. இந்த துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியது நம் கடமை என்றார்.
மேலும், காட்டுத்தீயில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தீயணைப்பு துறை, வனத்துறை உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.