காங்கிரஸ் அலுவலகத்துக்குள் சிதம்பரம் ! முற்றுகையிட்ட சிபிஐ அதிகாரிகள் !! கைது செய்யப்படுகிறார் !

By Selvanayagam PFirst Published Aug 21, 2019, 9:06 PM IST
Highlights

தலைமறைவானதாக சொல்லப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சிபிஐ  அதிகாரிகள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சரும் , காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்து விட்டது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம்  தரப்பினர் மேல் முறையீடு செய்தனர்.

மனுவை பட்டியலிடாமல் விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு நாளை மறுநாள்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத்தெரிகிறது. 

சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முயற்சித்து வரும் நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு ப.சிதம்பரம்  வருகை தந்தார். இதனையடுத்து காங்கிரஸ் தலைமையகத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம்  பேசினார்.

அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. 7 மாதங்களுக்கு பின் எனது முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

பொய்யர்களால் தவறான  தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் என் மீதும், என்  குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு  செய்யப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடைபெற்றுள்ளன.

சுதந்திரத்தை பெறவும் போராடினோம், சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகிறோம். ஜனநாயகம், சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

அரசியல் சட்டப்பிரிவும் 21 குடிமகனின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. சிபிஐ  மற்றும் அமலாக்கத்துறை சார்பில் எந்த நீதிமன்றத்திலும் எந்தக்குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை. நான் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதாக வெளியான தகவலை கடுமையாக மறுக்கிறேன். எனக்கு நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நான் என்னுடைய வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன் என தெரிவித்தார்..

ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். காங்கிரஸ் அலுவலகம் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது.

click me!