தலைமை நீதிபதியின் கருத்துடன் முரண்பட்ட நீதிபதி சுந்தர்.. காரணம் இதுதான்

First Published Jun 14, 2018, 3:17 PM IST
Highlights
chennai high court justice sundar contradict with chief justice indira banerjee


சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது; 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கி சபாநாயகர் உத்தரவிட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். ஆனால் தலைமை நீதிபதியின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் அதிலிருந்து தான் முரண்படுவதாகவும் கூறிய நீதிபதி சுந்தர், எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என தீர்ப்பளித்தார். 

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்துகொண்டதால் அவர்களை தகுதிநீக்கம் செய்யுமாறு அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் பரிந்துரைத்தார். இதையடுத்து இதுதொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்களில் ஜக்கையன் மட்டும் சபாநாயகரிடம் விளக்கம் அளித்தார். மற்றவர்கள் விளக்கம் அளிக்காததால், தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். 

தகுதிநீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து, கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அப்போது, சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டது செல்லும் எனவும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். 

அமர்வின் மற்றொரு நீதிபதியான சுந்தர், எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லாது என முரண்பட்ட தீர்ப்பளித்தார். சபாநாயகர் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற தலைமை நீதிபதியின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்த நீதிபதி சுந்தர், சபாநாயகரின் உத்தரவு நீதித்துறைக்கு உட்பட்டதுதான் எனவும் எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பளித்தார்.

ஒரே அமர்வில் உள்ள இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார். அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்போ, 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலோ நடத்தக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 

click me!