நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்போது மாவட்ட ஆட்சி தலைவர்கள் போன்ற உயர் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்போது மாவட்ட ஆட்சி தலைவர்கள் போன்ற உயர் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆட்சியர் கையெத்திடாமல், அவரது தனி உதவியாளர் (சென்னை மாவட்ட நில நிர்வாகம்) கையெழுத்திட்டிருந்தார். இந்த அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி சுரேஷ்குமார், ஆட்சியர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும் தவறாமல் செயல்படுத்தி வருவதாகவும், அறிக்கைக்கு அரசு வக்கீல் ஒப்புதல் தராததால், தனி உதவியாளர் கையொப்பமிட்டு தாக்கல் செய்துவிட்டதாகவும் கூறினார்.
மேலும் இதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் கூறிய அவர், இந்த தவறுக்கு மன்னிப்பும் கோரியிருந்தார். மனுவை பரிசீலித்த நீதிபதி சுரேஷ்குமார், மனுவில் தேதி குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, கையெழுத்துடன் தேதியை குறிப்பிட வேண்டும் எனவும், தேதி குறிப்பிடாத மனுவை மாவட்ட ஆட்சியர் போன்ற உயர் அதிகாரிகள் தாக்கல் செய்யக்கூடாது எனவும் உயர் அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி, விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.