கொரோனாவை அழிக்க சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை..!! ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட தகவல்..!!

By Ezhilarasan BabuFirst Published May 25, 2020, 4:38 PM IST
Highlights

இதுநாள்வரை 1,06,307லிட்டர் லைசால் மற்றும் 20,59,625 லிட்டர் சோடியம் ஹைப்போ குளோரைட் சொல்யூஷன் 5% என்னும் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டுள்ளது என ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார்  21.65 லட்சம் லிட்டர் கிருமி நாசினி கொண்டு தீவிர கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப்  பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பின் முழு விவரம் :-  சென்னை பெருநகர மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு மேற்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தினசரி கொரோனா நோய்த்தொற்று தடுக்கும் வகையில் பல்வேறு நவீன இயந்திர உபகரணங்களை கொண்டு அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக தொற்று நோய் கண்டறியப்பட்ட  நபர்கள் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் கீழ்க்காணும் உபகரணங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது , கொரோனா நோய் தடுப்பு பணியில் 1671 கையினால் எடுத்துச்செல்லும் பல்வேறு விதமான தெளிப்பான்கள் மூலம் லைசால் எனும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது .  மேலும் 292 வாகனம் மூலம் எடுத்துச்செல்லும் பல்வேறுவிதமான பெரிய தெளிப்பான்கள் சோடியம் ஹைப்போ குளோரைட் சொல்யூஷன் 5% எனும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கொரோனா நோய் தடுப்பு பணியில் 2180 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .  15-5-2020 முதல் 22-5-2020 வரை மொத்தம் 56 ஆயிரத்து 675 தெருக்களில் 25 ஆயிரத்து 393 கிலோமீட்டர் வாகனம் மூலமும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுள்ளது.  கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் களப்பணியாளர்கள் முழு உடல் கவசம் PPE kit அணிந்து காலை மாலை என இருவேளைகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளுக்கு இதுநாள்வரை   1,06,307லிட்டர் லைசால் மற்றும் 20,59,625 லிட்டர் சோடியம் ஹைப்போ குளோரைட் சொல்யூஷன் 5% என்னும் கிருமிநாசினி பயன்படுத்தப்பட்டுள்ளது என ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 

click me!