வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ்... ப. சிதம்பரத்தை வளைக்க சிபிஐ, அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை?

Published : Aug 20, 2019, 09:51 PM ISTUpdated : Aug 20, 2019, 09:52 PM IST
வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ்... ப. சிதம்பரத்தை வளைக்க சிபிஐ, அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை?

சுருக்கம்

ப.சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் டெல்லியில் உள்ள ப. சிதம்பரத்தின் இல்லத்தில் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்க அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சென்ற ஆண்டு மனு தாக்கல் செய்தனர். 
இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அந்தத் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ப.சிதம்பரத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால் ப.சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சிதம்பரத்தின் கோரிக்கை ஏற்றுக் கொள்ள மறுத்து முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

 
இதனால் ப.சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் டெல்லியில் உள்ள ப. சிதம்பரத்தின் இல்லத்தில் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உச்ச நீதிமன்றத்தை ப.சிதம்பரம் நாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
இதற்கிடையே ப. சிதம்பரம் வெளிநாடுகளுக்கு எங்கும் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸை வழங்க அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கும்பட்சத்தில், ப.சிதம்பரம் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்.  

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!