
ஆர்.கே.நகரில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், தொகுதிக்கு தொடர்பில்லாதவர்களை வெளியேற்றும் வகையில், தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அதிமுக, திமுக, டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த முறை, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் பலத்த கண்காணிப்பையும் மீறி, தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
100 கோடிக்கு மேலாக பணப்பட்டுவாடா நடத்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இதுவரை பல இடங்களில் பணப்பட்டுவாடா நடந்து உள்ளதாகவும், இதற்கு போலீசார் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதிமுக மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இதன் பின்னர் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும், பிரச்சாரம் நிறைவடைந்தவுடன் கண்காணிக்க உள்ளனர். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக புகார் வரும் நிலையில், போலீசார் சோதனையை அதிகரித்துள்ளனர்.